ஒரே நாளில், ஒருவர், நாடு முழுவதும் பிரபலமாவது எல்லாம், உலக அதிசயம் தான். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம், மலையாள நடிகை ப்ரியா வாரியருக்கு கிடைத்துள்ளது.
இவர் நடித்த, முதல் படமான, ஒரு அடார் லவ், இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்குள், தன் கண் அசைவின் மூலம், பிரபலமாகி விட்டார். அவர் அளித்துள்ள பேட்டி:
இந்த திடீர் பிரபலம், உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வை தருகிறது?
எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. வானத்தில் மிதப்பது போல் உள்ளது. கேரளாவில் இருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து, எனக்கு அழைப்புகள் வருகின்றன. ரசிகர்களின் இந்த பாராட்டு, எதிர்காலத்திலும் எனக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டுமென, கடவுளை வேண்டுகிறேன்.
குடும்பம், படிப்பு பற்றி?
திருச்சூரில் உள்ள விமலா பெண்கள் கல்லுாரியில், பி.காம்., முதலாமாண்டு படிக்கிறேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான். அப்பா, கலால் துறையில் பணியாற்றுகிறார்; அம்மா, ஹோம் மேக்கர்.
தோழியர், ஆசிரியர்களிடமிருந்து பாராட்டு வந்ததா?
என்னை திரையில் பார்ப்பதில், அவர்களுக்கு எல்லாம், ரொம்பவே மகிழ்ச்சி. குறிப்பாக, தோழியர், பாராட்டி தள்ளி விட்டனர். ஆசிரியர்கள், படப்பிடிப்பு பாதிக்காமல் இருப்பதற்கு, நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இப்போது, கல்லுாரியில் பிரபலமாகி விட்டேன். வெளியில் பார்க்கும் ரசிகர்கள், பொதுமக்கள், என்னை அடையாளம் கண்டு கொள்ள துவங்கி விட்டனர். திடீர் பிரபலம், வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
குடும்பத்தினர் என்ன நினைக்கின்றனர்?
நான் சினிமாவில் நடிப்பது, அப்பா, அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக, என் தாத்தாவும், பாட்டியும், ரொம்ப சந்தோஷப்பட்டனர். நான், பெரிய நடிகையாக வேண்டும் என்பது, அவர்களது விருப்பமாக உள்ளது.
இந்த படத்தில், உங்கள் கேரக்டர் என்ன?
ஸ்மார்ட்டான கல்லுாரி மாணவியாக நடிக்கிறேன். என்னுடன் நடிக்கும், ரோஷன், மலையாள, ‘டிவி’ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ‘டிவி’ நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் அவருக்கு உண்டு.
உங்களின் முந்தைய அனுபவம் என்ன?
ஏற்கனவே, சில குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அழகி போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும் உண்டு. பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். மோகினியாட்டத்தை முறையாக கற்றுள்ளேன். கர்நாடக சங்கீதமும் பயின்று வருகிறேன். பள்ளி, கல்லுாரிகளில் நடந்த நடன போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். எனக்கு எல்லா வித்தையும் தெரியும்.
நிஜ கல்லுாரி அனுபவத்துக்கும், சினிமா கல்லுாரி அனுபவத்துக்கும் என்ன வித்தியாசம்?
நான், மகளிர் கல்லுாரியில் படிப்பதால், சில சுவாரசியமான அனுபவங்களை இழந்துள்ளேன். ஆனால், சினிமாவில், இரு பாலர் பயிலும் கல்லுாரியில் படிப்பதை போல நடிக்க வேண்டியிருந்தது. இந்த அனுபவம், ரொம்ப வித்தியாசமாகவும், இனிமையாகவும் இருந்தது.
உங்கள் லட்சியம்?
சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும். அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும். நல்ல நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும். அதற்கு, ரசிகர்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும்.