சீனாவில் 68 வயதான முதியவர் ஒருவர் 20 வயது இளைஞர் போன்ற தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.சீனாவின் ஷாங்காய் நகரில் 1950ஆம் ஆண்டு பிறந்த ஹு ஹாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்களும் முதியவர்களுக்கான நிகழ்ச்சியில் இந்த இளைஞர் ஏன் கலந்து கொள்கிறார்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு காரணம் 20 வயது இளைஞனைப் போன்ற ஹு ஹாயின் தோற்றம், உடல்மொழி, உடை தான். அதன் பிறகு தனது வயதுக்குரிய சான்றை அவர் சமர்பித்து போட்டியில் கலந்து கொண்டார்.‘மிக நவீன தாத்தா (Most Modern Grandpa)) என்ற பட்டத்தை வென்ற ஹு ஹாய் வெளியுலகில் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி, பத்திரிகைகள், மொடலிங் துறை என பல துறைகளில் பணியாற்றினார்.
இது தொடர்பாக ஹு ஹாய் கூறும் போது;
‘என்னுடைய இந்தத் தோற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருக்க யோகா செய்கிறேன். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்கிறேன். தினமும் 30 நிமிடங்கள் படிகளில் ஏறி இறங்குகிறேன். குறைவான ஆனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறேன்.
சில சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறேன். இவை தவிர, நான் எப்போதும் என்னை 20 வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்கிறேன். வயது என்பது வெறும் எண்கள்தான். நாம் எப்படி உடலை வைத்துக் கொள்கிறோம். எப்படி நல்ல எண்ணங்களை நிறைத்துக் கொள்கிறோம். எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொருத்தே நம் உருவம் வெளிப்படுகிறது. முதுமை என்பது தவிர்க்க இயலாதது.
எல்லோரும் ஒருநாள் முதுமையடையத்தான் போகிறோம். ஆனால் அந்த முதுமையை ஏதோ கெட்ட அம்சம் போலவும், மரணத்தை நெருங்குவது போலவும் நினைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமற்றது.
இந்த எண்ணம் உங்கள் வயதை விட அதிக முதிர்ச்சியைக் கொண்டுவந்துவிடும். நான் மரணமடையும் கடைசி நொடியிலும் என்னை இருபது வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்வேன்.ஒவ்வொரு மனிதனுக்கும் மனம், உடல், உடலியக்கம் என 3 விதமான வயதுகள் இருக்கின்றன. கடைசி இரண்டு வயதுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
என்னுடைய உடல், உடலியக்கம் சார்ந்த வயது 40. ஆனால் என் மனதின் வயது 20 ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருபது வயது இளைஞர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அவரைப் போலவே இளமையாக சிந்திக்கவும் முடியும். இளமை என்பது அணுகுமுறைதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசமான வாழ்க்கையை வாழுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.