வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பாதிப்புகளுக்கு எளிய தீர்வுகள் காணலாம். கோடையில் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகிறோம். இதற்கு எளிய இயற்கை மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.எலுமிச்சை மற்றும் வெள்ளரி, தர்பூசணி, இப்படி பல்வேறு இயற்கையின் கொடைகள் நம்மை வெயிலில் இருந்து பாதுகாப்பதில் முதன்மையாக விளங்குகிறது. அதிக அளவில் மோர் அருந்துவதும் வெயிலை சமாளிக்கும் திறன் தருகிறது.
வெயிலால் உடலில் ஏற்படும் நீர்இழப்பை இவை அனைத்தும் ஈடுசெய்யும். உடலில் அதிக அளவில் ஏற்படும் நீர் இழப்பு சோர்வை ஏற்படுத்தும். எனவே அதிக அளவு நீர் பருகுதல் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் காய், கனி வகைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் எலுமிச்சை.
எலுமிச்சை உடலுக்கு தேவையான விட்டமின் சத்து உள்பட ஏராளமான சத்துகளையும் உள்ளடக்கியது. சிட்ரஸ் ப்ரூட் வகையை சார்ந்தது. அதன் சாறு மட்டுமின்றி தோலும் சிறந்த மருந்தாகிறது. கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்ப பிரச்னையில் இருந்து விடுபட எலுமிச்சை வெள்ளரி கலந்த சாறு பயன்தரும்.வெயில் மற்றும் கோடையில் அதிக வெப்பத்தால் தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் எனப்படும் பாதிப்புகள் பெரும்பாலானவர்களை தாக்கும். இதற்கு எளிய தீர்வு தருகிறது எலுமிச்சை.
செய்முறை: ஒரு வாணலியில் அரை ஸ்பூன் சீரகத்தை போட்டு வறுக்கவும். அதனுடன் அரை தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து சூடாக்கவும். அதில் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடித்து வர மேற்சொன்ன வெப்ப பாதிப்புகளான தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்து கொண்டால், தோல் நோய்கள் மற்றும் கட்டிகளுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும்.
செய்முறை: எலுமிச்சை பொடி சிறிது எடுத்து அதனுடன் பால் அல்லது பழச்சாறுகளில் ஏதாவது ஒன்று சிறிது கலந்து அதனை மேல்பூச்சாக தோலில் தடவி சிறிது நேரம் ஊறி கழுவிவர, வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமை மற்றும் கட்டி பாதிப்புகள் நீங்கும்.