“பெண்களுக்குக் கடினமான துறை என்பது கிடையாது” – சச்சினை அசரவைத்த அண்ணா பல்கலைக்கழக மாணவி

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தொழில் நுட்ப பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.

சச்சின்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலை செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில் அமைந்துள்ளது. இதன் 11ம் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்கில் நெக்ஸ்ட் என்றும் தொழில்நுட்ப பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்கலந்துகொண்டு அவர்களுக்குப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் கலந்துகொண்டனர். 2018ம் ஆண்டிற்குள்  BMW சார்பாக 365 இன்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் இந்தியாவில் உள்ள முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், பி.எம்.டபிள்யூ நிறுவனம் அதற்கான தொழில்நுட்பம் குறித்த நேரடி பயிற்சியையும் அளிக்கவுள்ளது.

இந்தியாவின் பி.எம்.டபிள்யூ குரூப் தலைவரான விக்ரம் பாவா, இந்தியாவின் சொகுசு ஆட்டோமோட்டிவ் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் சாலையில் அதிக அளவு சொகுசு வாகனங்கள் செல்ல தொடங்கிவிட்டன. அதற்கேற்ப தொழில்நுட்பத் திறன் கொண்ட டெக்னீஷியன்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை `ஸ்கில் நெக்ஸ்ட்’ பயிற்சி மூலம் அதிகரிக்க இருக்கிறோம்.” என்றார்

அதைத் தொடர்ந்து பி.எம்.டபிள்யூ குரூப் சென்னை பிளான்ட் மேலாண்மை இயக்குநர் ஜோசென் “மிகச்சிறந்த கார்களை உருவாக்குவதற்கு, திறன் மிக்கப் பொறியாளர்களே காரணம். நவீனத் தொழில்நுட்பம் குறித்த அறிவு மற்றும் சிக்கலான வேலைகளில் அவர்களின் தன்னம்பிக்கை ஆகியவையே காரணம். ஸ்கில் நெக்ஸ்ட் பயிற்சி மூலம் அவர்களுக்குத் தொழில் துறையில் வெற்றிகரமான வாழ்க்கை நிச்சயம் என்ற நம்பிக்கை ஏற்படும்” என்றார்.

நிகழ்ச்சியின் இடையே சச்சின் டெண்டுல்கர் அசெம்பிள் செய்யும் இடத்திற்கு வந்தார். பலத்த கரகோஷங்களோடு அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்றனர். அப்போது, ஸ்கில் நெக்ஸ்ட் போன்ற முன்முயற்சிகள் நமது நாட்டின் ஆட்டோமோட்டிவ் வளர்ச்சியை மேம்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன். நேரடி பயிற்சிதான் நமது திறனை அதிகரிக்கும். விளையாட்டு துறையில் எனது வெற்றிக்கு நேரடி பயிற்சிகளே உதவின. அதுபோல் மாணவர்களும் இந்தப் பயிற்சி மூலம் தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார். பிறகு, அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களோடு அவர் தொழில் நுட்பம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அருகிலிருந்த மாணவியிடம் நீங்கள் எவ்வளவோ பிரிவுகள் இருக்கக் கடினமான மெக்கானிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என சச்சின் டெண்டுல்கர் கேட்டார். “சிறிய வயதிலிருந்தே எனக்கு மெக்கானிக்கல் பிரிவில் அதிக ஆர்வம் இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம். பெண்களுக்குக் கடினமான துறை என்பது கிடையாது. ஆர்வமும் அதனை எப்படி அடையவேண்டும் என முயற்சி செய்வதிலும்தான் வெற்றி அமைந்துள்ளது” என்றார். “உங்களைப் போல நிறையப் பெண்கள் இந்தத் துறைக்கு வர நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என அந்த மாணவிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்தார். பிறகு, அந்த மாணவர்களுக்கு பி.எம்.டபிள்யூ என்ஜினை அசம்பிள் செய்து அதை வாகனத்துடன் பொருத்திக் காட்டினார்.