தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரால் அனுப்பப்பட்டுள்ள முறைப்பாட்டுக் கோப்புக்களைப் பார்த்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலைத்துப்போயுள்ளார்.நாரேஹன்பிட்டியிலுள்ள தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திடீரெனக் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார்.
அந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன் அமைச்சின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
கடந்த 3 ஆண்டு காலப்பகுதியில் அமைச்சால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் காலங்களுக்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களை அரச தலைவர் பார்வையிட்டார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்கள் கடந்த டிசெம்பர் மாதத்திலிருந்து அமைச்சால் திரட்டப்பட்டு வந்தது.
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தனியான கோப்புக்கள் போடப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலைத்துப்போயுள்ளார். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால விசாரித்துள்ளார்.