சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை.
கூட்டு எதிரணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதனை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை நடத்தினார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 3 மணிநேரம் இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், ரிசாத் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகங்கள் இந்தச் சந்திப்புக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 8 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையில், ஹக்கீம் இந்தக் கூட்டத்துக்கு வராதமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாக ஹக்கீம் குற்றம்சாட்டியிருந்தார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைகளில் ஐதேக தமக்கு துரோகம் இழைப்பதாகவும், அது தொடர்ந்தால் பாடம் கற்பிக்க வேண்டிய நிலை வரும் என்றும் ஹக்கீம் சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.