கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, 30 ம் தேதியுடன் பரோலை முடித்துக்கொண்டு இன்று 31ந் தேதி மீண்டும் சிறை திரும்புகின்றார்.
சசிகலாவின் கணவர் நடராசன் உடல்நலக் குறைவால் கடந்த மார்ச் 20 -ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா 15 நாள் பரோலில் மார்ச் 20 -ம் தேதி வெளிவந்தார். இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டு தஞ்சையிலேயே கணவர் நடராசன் இல்லத்தில் தங்கியுள்ள அவர், கடந்த 10 நாட்களாக வீட்டுச் சிறையில் இருப்பதுபோல் இருந்து வந்தார். விதிமுறைகள் காரணமாக 30 -ம் தேதி நடைபெற்ற கணவர் நடராசனின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.
இந்த நிலையில்தான் “ஆறு மாதத்துக்குள்ளாக இரண்டு முறை பரோல் பெற்றுவிட்டதால் கூடுதலாக ஒருமாதம் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும்” என சிறை கண்காணிப்பாளர் சோமசேகரன் தெரிவித்துள்ளார். இந்தச் சட்ட சிக்கலை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த சசிகலா 15 நாள் பரோலை 10 நாள்களில் முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனால் தனது 15 நாள்கள் பரோலை 10 நாள்களாகக் குறைத்துக்கொண்டு மீண்டும் இன்று 31 -ம் தேதி காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் சசிகலா மாலை 4 மணிக்குள் சிறைக்கு திரும்ப சசிகலா முடிவெடுத்துள்ளார்.
15 நாட்கள் பரோலை பதியிலே முடித்துக் கொண்டு முன்கூட்டியே சிறைக்குத் திரும்புவதால் கூடுதலாக வரும் ஒருமாத சிறைவாசத்தில் இருந்து காத்துக்கொள்வார். தனது 15 நாள்கள் பரோல் நாள்களில் பயண நேரத்தைக் கணக்கில் கொள்ளாததால் சசிகலாவின் பரோல் 10 நாட்களாகக் குறைகின்றது. எனவே 5 நாள்களுக்கு முன்னதாகவே சிறைவாசத்துக்குத் திரும்புவதால் சிறை நன்னடத்தை விதிகளின்படி நன்னடத்தை சான்று கிடைத்துவிடுகின்றது. இது 4 வருடச் சிறை வாசத்தில் இருந்து விடுபடும்போது பயன்படும் என்கின்றனர் சசிகலா தரப்பினர்.