ரஜினி, கமல் என்று இருவரும் எம்.ஜி.ஆரின் பெருமைகளைப் பற்றி பல மேடைகளில் பகிர்ந்து வருகின்றனர். “மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ.
அப்போதெல்லாம் பாரதிராஜாவை அழைத்து சினிமா உலகம்பற்றி மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொள்வார்” என்று ரஜினியே பாரதிராஜாவுக்கும் எம்ஜிஆருக்குமான நட்பு பற்றி பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் உடனான நட்பு பற்றி இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம்.
”நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, ‘சின்னவர் வருகிறார்… சின்னவர் வருகிறார்… ‘ என்று பயங்கர பரபரப்பு. அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது.
காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.
‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.
ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.
அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.
அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார். “அஞ்சு பத்து ‘அண்ணா’க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்” என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர். எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார்.
திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார். ‘எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்’ என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.
அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் ‘வேதம் புதிது’. ‘வேதம் புதிது’ திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
அடுத்து ‘வேதம் புதிது’ படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
‘வேதம் புதிது’ ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ‘ புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்’ என்று எழுதியிருந்தேன்.
அவர் டாக்டர் பட்டம் பெற்றபோது தமிழ்சினிமா உலகத்தையே ஒன்றுகூட்டி அவருக்காகப் பாராட்டுவிழா நடத்தியவன், அவரது இறுதி ஊர்வலத்தைப் படம்பிடித்து ‘வேதம் புதிது’ படத்தில் திரையிட்டுக்காட்டினேன்.
அப்போது இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. நானே முன்னின்று வைரமுத்துவை தனியாக பேசவைத்தும் இளையராஜாவைப் பின்னணி இசைக்கவைத்தும் அவரையே பாடல் ஒன்றை எழுதிப் பாடவைத்தும் அந்தப் பாரத ரத்னாவுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
முன்னதாக 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை முதன்முதலாக ராமவரத்திலிருந்து, ‘சின்னவர் இறந்துட்டார்’ என்று எனக்கு போன் வருகிறது.
என் மனம் நொறுங்கிப் போகிறது. கண்களின் கண்ணீர் வழிந்தோட காரை எடுத்துக்கொண்டு ராமவரம் நோக்கிப் பறந்தேன். ஜானகி அம்மையார், அவரது உறவினர்கள் தவிர வேறு யாருமே இல்லை. எப்போதும் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கும் உதடுகள் மூடியிருந்தன. என்னைப் பாசமாகத் தழுவிய கைகள் ஜில்லிட்டு இருந்தன.
குல்லா போடாத, கண்ணாடி அணியாத எம்.ஜி.ஆர் கண்ணுறங்கிக் கொண்டு இருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். எம்.ஜி.ஆர் உடலை மாடியில் இருந்து இறக்க வேண்டும்.
அவருக்கு ஜிப்பா அணிய முடியவில்லை, ஜிப்பாவின் பின்பக்கம் கிழித்து அணிவித்து தையல் போட்டேன். எத்தனையோ திரைப்படங்களில் அவருக்கு விதம்விதமான மேக்கப் போட்டு இருப்பார்.
கடைசி ஊர்வலத்துக்கான மேக்கப்பை எம்.ஜி.ஆர் முகத்துக்கு நான்தான் போட்டேன். குல்லா போட்டு, கண்ணாடி அணிவித்து கட்டிலில் படுக்க வைத்து கீழே இறக்கினேன்.
அடக்க முடியாத கண்ணீரோடு ராஜாஜி ஹாலுக்கு மக்கள் திலகத்தின் உயிரற்ற உடலை கொண்டு சென்றோம்” தன்னையறியாமல் வரும் கண்ணீரை துடைத்தபடி பேசி முடித்தார் பாரதிராஜா.