தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில், ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்தக் கட்சிகளின், சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒருபோதும் உதவக் கூடாது என்று தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபையிலும், யாழ். மாவட்டத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசசபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிமைக்க உதவினர்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை பிரதேச சபையில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உதவியுடன் ஈபிடிபி ஆட்சியமைப்பதற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் ஆதரவு அளித்திருந்தார்.
இந்த நிலையில், திருக்கோவில் மற்றும் வலி.தெற்கு பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவிய, தமிழர் விடுதலைக் கூட்டணியினரை கட்சியில் இருந்தும், பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வலி.தெற்கு பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் மீதும், திருக்கோவில் பிரதேசசபையின் ஒரு உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, வேலணை பிரதேச சபையில், சிறிலங்கா பொது ஜன முன்னணியின் உதவியுடன் ஈபிடிபி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கிய, தமது உறுப்பினர் மீதான நடவடிக்கை பற்றி ஆனந்தசங்கரி எந்த தகவலையும் வெளியிடவில்லை.