விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் கன்னி. ராசிநாதன் புதனும் லாபஸ்தானாதிபதி சந்திரனும் உங்கள் ராசியைப் பார்க்கிற நேரத்தில் இந்த வருடம் பிறப்பது ஒரு பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பாகும்.
ராசிநாதன் புதன், ராசியைப் பார்ப்பதால், மனதில் தைரியமும் உற்சாகமும் எப்போதும் நிலைத்திருக்கும். ஆனால், இந்த வருடம் புதன் நீசமாக இருக்கும் நேரத்தில் பிறந்திருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த ஆண்டில் உங்களை நோக்கி வருகிற சவால்களையெல்லாம் சந்திரனின் துணைகொண்டு, புத்திசாலித்தனமாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் 14.4.18 முதல் 3.10.18 வரை தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். எப்போதும் பணப்புழக்கம் உங்களிடம் இருந்துகொண்டே இருக்கும். எதிர்பார்த்த தொகையெல்லாம் கைக்கு வரும். 4.10.18 முதல் குரு 3-ம் இடத்தில் மறைகிறார். உங்கள் ராசிக்கு குரு பாதகாதிபதியாக இருப்பதால், காரியங்களில் எந்த பாதிப்பும் பெரிதாக இருக்காது. ஆனால், பங்குனி மாதம் குரு 4-ம் வீட்டில் அதிசாரமாகச் செல்வார். அப்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான், அர்த்தாஷ்டமச் சனியாக 4-ம் வீட்டில் தொடர்வதால், உங்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் வட்டத்தை ஆரோக்கியமாக அமைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரைநோய் உள்ளவர்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
இந்த வருடத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு யோகக்காரராக இருக்கிற சுக்கிரன் வலுவடைகிறார். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். மனைவி வழியில் சேரவேண்டிய பணம் வந்துசேரும். தந்தை வழியில் பிரிக்கப்படாமல் இருந்த சொத்துகள் சுமூகமாகப் பாகப்பிரிவினை செய்யப்பட்டு, உங்களின் பங்கு உங்கள் கைக்கு வரும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 4-ல் இருப்பதால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது 5-ம் வீட்டில் இருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
மாணவ மாணவிகள், குறிப்பாக உயர் கல்வி படிப்பவர்கள் தங்களின் படிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முறைக்கு இரண்டு முறை எதையும் எழுதிப் பார்த்துவிடுவது நல்லது. மாணவர்கள் கல்லூரிகளில் சரியான பாடப்பிரிவை முன்கூட்டியே திட்டமிட்டுச் சேர்வது நல்லது. இல்லாவிட்டால், இஷ்டமில்லாத ஒரு பாடப்பிரிவில் சேர்ந்துவிட்டு, பிறகு மாற்றவேண்டியிருக்கும். அதனால் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து, விற்பனையையும் லாபத்தையும் அதிகரிப்பீர்கள். ஆனால், நீங்கள் கடைவைத்திருக்கும் கடையின் உரிமையாளர், இடத்தைத் தன்னிடமே தரும்படிக் கேட்பார். அவரை மட்டும் கொஞ்சம் சரிக்கட்டப் பாருங்கள். அதற்கு அவர் உடன்படாவிட்டால், வேறு இடத்துக்குக் கடையை மாற்றப் பாருங்கள். நிச்சயம் உங்கள் வியாபாரம் வெற்றியடையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் சனி பகவானின் பார்வை இருப்பதால், கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பொறுமையுடன் செயல்படுங்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள்.
விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த வருடம் நன்றாக இருக்கிறது. விளைச்சலும் ரொம்ப அமோகமாக இருக்கும். பக்கத்து வயலில் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும்.
கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். புதிய பட வாய்ப்புகள் தேடி வரும். தொலைக்காட்சி நடிகர்கள் புதிய தொடரில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு கடந்த வருடத்தைவிட தொலைநோக்குச் சிந்தனையால் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
நாகை மாவட்டம், தகட்டூரில் அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தியை, அஷ்டமி திதி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; தீவினைகள் யாவும் நீங்கும். வெற்றிகள் கிடைக்கும்.