செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசு நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் என அமித் ஷா உளறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து, தான் வாய் தவறி அதனை உளறி விட்டதாக அமித் ஷா தெரிவித்தார்.
கடந்த 27ம் தேதி அன்று, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, “ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்’’ என்று கூறினார். இவர் பேசிய இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. நெட்டிசன்கள் மட்டுமன்றி காங்கிரஸ் தலைவர்களும் கேலி செய்தனர். இந்தப் பரபரப்பு அலை ஓய்வதற்குள், கர்நாடகாவில் இன்னொரு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, `சித்தராமையா ஏழைகளுக்கும் பட்டியலின மக்களுக்கும் எந்த நன்மையும் செய்யமாட்டார்’ எனப் பேசினார். இதை, கன்னடத்தில் மொழி பெயர்த்த எம்.பி ஒருவர், `மோடி ஏழைகளுக்கும் பட்டியலின மக்களுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார்’ என மாற்றிக் கூறிவிட்டார். அதனால், மீண்டும் அமித் ஷா பரபரப்பில் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் பேசிய அவர், `கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவுக்கு பதில் எடியூரப்பா பெயரை வாய் தவறி கூறிவிட்டேன். நான் வாய் தவறி பேசியதால் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் தவறு செய்தாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் என ராகுலுக்குக் கூறுகிறேன்’ என அமித் ஷா தெரிவித்துள்ளார்.