இலங்கையின் சிறந்த கல்வி முறைமை யாழ்ப்பாணத்திலேயே இருந்தது. அந்தப் பகுதியின் கல்வி முழுமையாக இல்லாமல் போயுள்ளது. மீண்டும் தரமான கல்வியை யாழ்ப்பாணத்தில் உருவாக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபையுடன் இணைந்து புதிய திட்ட மொன்றை அறிமுகம் செய்து பத்து ஆண்டுகளில் சிறந்த கல்வி முறைமையை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவோம். யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நாட்டுக்குப் பெரிய சேவைகளை செய்துள்ளனர்.
தற்போது பலர் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இந்த வெற்றிடத்தை நாம் இல்லாமல் செய்யவேண்டும்.
இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் 324 பேருக்கு நிரந்த ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்திற்கான தொண்டர் ஆசிரியர் நியமனம் நீண்ட காலங்களுக்குப் பிறகு வழங்கப்படுகின்றது. இன்னும் பலருக்கு எதிர்வரும் காலங்களில் நியமனங்கள் வழங்கப்படும். போர்க் காலத்தில் வடக்கில் பெரும் கஷ;டத்திற்கு மத்தியில் ஆசிரிய சேவையில் ஈடுபட்டனர்.
தற்போது நாம் வடக்கு மீது அவதானம் செலுத்தியுள்ளோம். போர்க் காலத்திலும் கூட அஞ்சாது ஆசிரிய சேவையில் ஈடு பட்ட ஆசிரியர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.
வடக்கு மாகாண தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண ஆளுநர் குரே, கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ;ணன் ஆகியோர் பெரும் முயற்சிகள் எடுத்தனர்.
எனது அமைச்சின் ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திற்கு அதற்கான பொறுப்புகளை வழங்கினேன். உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் நியமனங்கள் வழங்குவது சட்ட விதிமுறைகளை மீறுவதாகும். தொண்டர் ஆசிரிய நியமனங்கள் வழங்க தாமதமானது.
நாம் பாடசாலை செல்லும் காலத்தில் இந்த நாட்டில் சிறந்த கல்வி முறைமை யாழ்ப்பாணத்திலேயே இருந்தது. கொழும்பும் யாழ்ப்பாணமும் சிறந்த கல்வி மாவட்டமாக கருதப்பட்டன. அதன்பின்னர் கம்பகா மாவட்டம் கல்வி அறிவிலும் வசதியிலும் முன்னேற்றம் கண்டது.
அதன்பின்னர் கண்டியும் காலியும் முன்னேற்றம் கண்டது. அதன்பின்னர் குருநாகல் சிறந்த கல்வி மாவட்டமாக தோற்றம் பெற்றது.
30 ஆண்டு கால போரின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கல்வி முழுமையாக இல்லாமல் போயுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தை விடவும் சிறந்த கல்வி மாவட்டங்கள் பலவற்றை என்னால் சுட்டிக்காட்ட முடியும்.
இதற்குப் போரே பிரதான காரணமாகும். போர் காரணமாக பாடசாலைகள் பல அழிந்து போயின. இராணுவத்திற்கு பல பாடசாலைகளை கைப்பற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் சிறந்த கல்வி அறிவு உடையவர்களாகும். போர் காரணமாக ஆசிரியர்கள் பலர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாண தமிழ் மக்கள் நாட்டுக்கு பெரிய சேவைகளை செய்துள்ளனர்.
ஒரு தரப்பினர் ஆசிரியராக சேவை செய்து பல புத்திஜீவிகளை உருவாக்கினர். ஒரு சிலர் தனியார் துறையில் பணியாற்றினர். 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்னர் இந்த நாட்டின் பலர் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களிலும் அரச இயந்திரங்களிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வர்த்தக துறையில் முன்னேற்றம் கண்டு நன்றாக வாழ்கின்றனர். அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டியுள்ளது.
அத்துடன் ஒரு தரப்பினர் கொழும்பு வெள்ளவத்தையில் வந்து குடியேறினர். யாழ்ப்பாணத்தில் மனித வளம் என்பது முழுமையாக இல்லாமல் போனது.
இலங்கையில் கணித பாடவிதானத்திற்கு சிறந்த பாடசாலையாக யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி காணப்பட்டது. எனினும் அந்த தரத்தில் ஹார்ட்லி கல்லூரி தற்போது இல்லை.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, புனித ஜோன் கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி ஆகியன இலங்கையின் சிறந்த பாடசாலைகளாக காணப்பட்டன.
தற்போது அங்கு கல்வி முறைமை முழுமையாக தலைகீழாக மாறியுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் கல்வியின் தரத்தினை முன்னேற்றுவதற்கான காலம் வந்துள்ளது. இதனை ஓராண்டுக்குள் செய்து விட முடியாது. சுமார் பத்து ஆண்டுகள் தேவையாகும்.
கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தேவையான ஆசிரியர் மற்றும் அதிபர்களை வழங்கவுள்ளோம்.
வடக்கின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கு மாகாணத்துடன் இணைந்து புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்து செயற்படுத்த வேண்டும். இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். அடுத்த பத்து ஆண்டுகளில் சிறந்த தரமான கல்வி முறைமையை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவோம் என்றார்.