எம்.ஜி. ஆரின் உத்தரவில் ஜெயலலிதா 4 கோடி ரூபா(இந்திய) நிதியை போயஸ் தோட்டத்தில் வைத்து பிரபாகரனுக்கு வழங்கினார் என்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர் சி.பொன்னையன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கேள்வி:- ஈழத்தில் உருவான ஆயுத ரீதியாக பல்வேறு போராட்ட அமைப்புக்கள் தொடர்பில் எம்.ஜி.ஆர். எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்?
பதில்:- அப்போதிருந்த விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., அமிர்தலிங்கத்தின் புதல்வருடைய அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களும் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளித்திருந்தார். அனைவருடனும் நல்லுறவைப் பேணினார்.
இந்தச் சமயத்தில் தான் பாண்டி பஜாரில் ஒரு நாள் புளொட் அமைப்பின் தலைவர் முகுந்தனுக்கும்(உமா மகேஸ்வரன்) தம்பிக்கும்(பிரபாகரன்) இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
இதன்போது தம்பி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். உடனடியாகப் புரட்சித்தலைவர் என்னைத் தொடர்பு கொண்டார். நான் அப்போது சிறை உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தேன்.
உடனடியாக தம்பி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதற்கு அமைவாக தம்பி உள்ளிட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து சிறையிலிருந்து நேரடியாக புரட்சித்தலைவரிடத்தில் அழைத்துச் சென்றேன். அத்துடன் புரட்சித்தலைவர் அனைத்து அமைப்புக்களையும் அழைத்தார். இந்தச் சமயத்தில் புரட்சித் தலைவர் கூறிய வசனம் கூட எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது.
விடுதலைக்காக கருத்து வேறுபாட்டுடன் ஐந்தாறு மாடுகளாக மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களைத் தாக்க வேண்டும் என்று வெறிபிடித்த சிங்களம் என்ற சிங்கம் பார்த்துக் கொண்டுள்ளது.
நீங்கள் ஒன்றாக இணைந்து சிங்கம் வரும் போது பத்து கொம்பால் தாக்கினால் அதனை கொன்றுவிட முடியும்.
தனித்தனியாகச் சென்றால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். ஆகவே ஒற்றுமையாக இருங்கள். நான் உதவுகின்றேன் என்றார்.
அதன் பிரகாரம் பாரபட்சமின்றி ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கினார். தி.மு.க.வின் பின்னணியுடன் புரட்சித்தலைவரையே விமர்சித்த ரெலோவின் தலைவர் சிறிசபாரட்ணம் உள்ளிட்டவர்களுக்கு கூட உதவிகளை வழங்குவதில் புரட்சித்தலைவர் வேறுபாட்டினைக் காட்டியிருக்கவில்லை.
கேள்வி:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைமைகளிடத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டது ஏன்?
பதில்:- முழுமையாக அப்படிக்கூறி விடமுடியாது. புரட்சித்தலைவர் இருந்தபோது அவருடைய பணிப்பில் விடுதலைப்புலிகளுக்கான நிதி அம்மாவின் கையால் தான் போயஸ் தோட்டத்தில் வைத்து வழங்கப்பட்டது. நானும் அச்சமயத்தில் அங்கு இருந்தேன்.
விடுதலைப்புலிகள் சார்பில் தம்பி(பிரபாகரன்), அன்ரன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம் ஆகியோர் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் அம்மா, இந்தியாவில் வடக்கு எங்களை அடக்கியாளுகிறது. ஹிந்திமொழி திணிப்பு நடைபெறுகின்றது.
இந்தியாவில் தமிழர்களின் கொடியை டில்லியில் பறக்க விடமுடியாது. தமிழர்களின் கொடியை நாட்டுவதென்றால் தனி நாடு தேவை. அந்த தனித் தமிழ் நாட்டினை அமைக்க கூடியவர் நீங்கள் தான். தனி ஈழத்தின் கொடி ஐ.நா.சபையில் இருக்க வேண்டும். அதற்கான அச்சாணியாக இந்த நான்கு கோடி ரூபா(இந்திய) நிதியை புரட்சித்தலைவர் முற்பணமாக வழங்குகின்றார் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிக் கையளித்திருந்தார்.
இருப்பினும் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் இறப்பின் பின்னர் புலிகள் அமைப்பு தொடர்பில் அம்மா வருத்தமடைந்திருந்தார்.
இருப்பி னும் உண்மை நிலைமைகள் எடுத்துரைக்கப்பட்ட பின்னர் நான் விரும்பும் ஆட்சி டில்லியில் அமைந்தால் தனி ஈழத்தினை அமைத்து தருவேன் என்று தமிழக சட்ட மன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.