ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் கடந்த 47 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து நடிகர் ரஜினி பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாள்களாக அவதிப்பட்டுப் போராடிக்கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ரஜினி முதல்முறையாக அரசுக்கு எதிரான தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை போராட்டக் களத்துக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.