வெளுத்து வாங்க ஆரம்பித்திருக்கும் வெயிலுக்கு, பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாரும் பாதிப்புக்குள்ளாகுவது இயற்கை. இந்த நேரத்தில், உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.லெகிங்ஸ் உட்பட சில ஆடைகளுக்கு இந்த வெயிலுக்கு டாட்டா சொல்லலாம். மேலும், பெண்கள் இந்தச் சமயத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் பற்றி சொல்கிறார், அரசு தோல் மருத்துவத் துறைத் தலைவரான டாக்டர் யு.ஆர்.தனலட்சுமி.
கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும் ஒரு காரணம். பெண்கள் தங்களின் வசதிக்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிவது ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த வகையான ஆடைகளைக் கோடையில் தவிர்ப்பது அவசியம். இவை பல சருமப் பிரச்னைக்குக் காரணியாக அமைகிறது. லெகிங்ஸ் பொதுவாக பனியன் மெட்டீரியலில் உருவாக்கப்படுகிறது. ஜீன்ஸ் துணியும் முரட்டுத்தன்மையுடன் இருக்கும் என்பதால், வியர்வையை உறிஞ்சாது. இதனால், சுரக்கும் வியர்வை உடலிலே தங்கி, பூஞ்சையை ஏற்படுத்தும். இதனால், அரிப்பு, படை, வியர்க்குரு, சிறிய கட்டிகள், தேமல் என ஆரம்பித்து, சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்னை வரை செல்லும். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, காட்டன் ஆடைகளையே அணியுங்கள். நீங்கள் அணியும் ஆடையும் தளர்வாக இருக்க வேண்டும்.
சிலர், குளிர்ச்சி இருப்பதற்காக ஈரமான ஆடைகளை அணிவது, குளித்ததும் உடலைச் சரியாகத் துவட்டாமல் ஆடை அணிந்துகொள்வது போன்ற பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். இது, மிகவும் தவறான பழக்கங்கள். ஈரமான ஆடைகள், பல்வேறு நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமையும். இதைத் தவிர்க்கவும். சரியான வழிகாட்டலின்றி, வீட்டு வைத்தியம் செய்யவும் வேண்டாம். இது சிலருக்கு அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்துவிடும்.
வெயில் காலத்தில், பெண்களுக்கு நிறைய முகப்பருக்கள், கட்டிகள் ஏற்படலாம். இதற்கான காரணங்களில் ஒன்று, மேக்கப். முகத்தில் சுரக்கும் எண்ணெய், மேக்கப் காரணமாக வெளியேற வழியின்றி தங்கிவிடுவதால், கட்டிகள் தோன்றும். எனவே, வெயில் காலத்தில் மேக்கப் போடுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு, மூன்று முறை தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். மேக்கப் போடும் சூழ்நிலை வந்தால், இரவில் படுக்கச் செல்லும் முன்பு முகத்தைச் சுத்தமாகக் கழுவிவிடவும். கோடை முடியும் வரை இரண்டு வேளைக் குளியுங்கள்.
சிலர் சன்ஸ்கிரீன் பயன்படுத்தியும் சருமப் பிரச்னை வருகிறது என்கிறார்கள். எல்லோருக்குமே ஒரே மாதிரியான சன்ஸ்கிரீன் செட் ஆகாது. குழந்தைகளுக்கு ஜீங்க் ஆக்ஸைடு கலந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் எண்ணெய்த்தன்மை அற்ற சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். அதிலும் தங்கள் சருமத்துக்கு ஏற்ப தேர்வுசெய்ய வேண்டும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துங்கள்.
கோடைக்காலத்தில் ஃப்ரீஹேர் விடுவதால், முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிகப்படியான வியர்வைச் சுரந்து அலர்ஜியை ஏற்படுத்தும். ஃப்ரீஹேருடன் வெளியில் செல்லும்போது முடியில் உள்ள புரோட்டின் அளவு குறையும். இதனால், முடி உதிர்தல் ஏற்படும். தினமும் தலைக்குக் குளித்துச் சுத்தமாக வைத்திருப்பதுடன், கூந்தலை நன்கு கட்டிக்கொள்வது நல்லது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பச்சிளம் குழந்தைகள், சிறுவர்களை இந்த நேரத்தில் வெளியே அழைத்துச்சென்றால், அதிகப்படியான வியர்வை வெளியேறி, சரும நோய்கள் ஏற்படும். வியர்வைக் காரணமாக நீரிழிப்பும் அதிகமாக ஏற்படும். இதனால், பகல் நேரத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.