விபரீத திருமணத்தால் தந்தையை இழந்த மகள்!

கொலை

நெல்லை மாவட்டத்தில் குடிபோதையில் மாமியாரிடம் தகராறு செய்த மாமனாரை, மருமகன் உட்பட உறவினர்கள் அடித்துக் கொன்றனர். இந்தக் கொலைக்கு விபரீத திருமணமே காரணம் என்று தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள கோவிலாண்டனூரைச் சேர்ந்தவர் தங்கதுரை. கூலித்தொழிலாளி. இவரின் மனைவி செல்வி. இவர்களின் மகள், அதே பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன். இவர் மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். திவாகரனும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வழக்கம்போல இவர்களது காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இவர்களது காதலுக்கு உறவு முறையே பிரச்னையானது. ஏனெனில், திவாகரன் உறவு முறையில் அந்தப் பெண்ணுக்கு சித்தப்பா முறை ஆகிறது என்கின்றனர் அவர்களின் உறவினர்கள். இருப்பினும் காதலில் போராடி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பிறகு, தங்கதுரைக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுவந்தது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் தங்கதுரை. வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதை, திவாகரன் மற்றும் உறவினர்கள் சாமி, செல்வராஜ் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் நாற்காலியால் தங்கதுரையைத் தாக்கியுள்ளனர். குடிபோதையிலிருந்த தங்கதுரை மயங்கியுள்ளார். நீண்ட நேரத்துக்குப் பிறகு, தனியார் மருத்துவமனைக்குத் தங்கதுரையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தங்கதுரை இறந்த தகவலை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். இந்தத் தகவல் சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தனுக்குத் தெரியவந்தது. அவர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தங்கதுரையின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் தங்கதுரையை அடித்துக் கொன்றதாகத் திவாகரன்மீது வழக்கு பதிவு செய்து, அவரைப் போலீஸார் கைதுசெய்தனர். கொலை குற்றத்தை மறைத்ததற்காகச் செல்வியையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்தச்சம்பவத்தில் தொடர்புள்ள சாமி மற்றும் செல்வராஜை போலீஸார் தேடிவருகின்றனர்.