வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்ய கோரி யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதில் இருந்து கடந்த கால அரசுகள் பொருத்தமான ஆளுநரை வடக்கு, கிழக்குக்கு நியமிக்கவில்லை.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் அரசின் பிரதிநிதிகளாக இருந்தார்களே தவிர தமிழ் மக்களின் மனங்களை வெல்லவில்லை. இது சிங்கள இனவாதிகளுக்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் கிடைத்த வெற்றி.
ஆனால் இன மத மொழி பேதமற்ற முற்போக்கு வாதியான வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டார்.
தமிழ் மக்களுக்காக சிறந்த சேவையாற்றிய நிர்வாகி அவர். அவரை இடமாற்றம் செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்படும். எனவே அவரது இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். என்றுள்ளது..