ஈ.பி.டி.பியின் ஆதரவோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருகிறது. தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு வருகின்றன.
சில சபைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அநேகமாக வடக்குக் கிழக்கில் உள்ள பெரும்பான்மையான சபைகளில் இவ்வாறு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றின் ஆதரவைப் பெற்றே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கப்போகிறது.
யாழ்ப்பாண மாநகரசபையில் தொடங்கிய இந்தப் பயணம் அம்பாறை வரை தடங்கலின்றித் தொடரும். கிழக்கில் சில இடங்களில் பிள்ளையானின் ஆதரவைக் கூடக் கூட்டமைப்புப் பெறக்கூடிய சூழலே காணப்படுகிறது. அதற்கான உள்ளுரையாடல்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்.
“நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?” என்று தீவிரத் தமிழ்த்தேசியப் பற்றாளர் ஒருவர் கூட்டமைப்பின் இந்தப் புதிய உறவைப் பற்றிக் கடுமையான தொனியில் சொன்னார்.
“ஈ.பி.டி.பியுடன் கூட்டுச்சேர்வதற்குக் கூட்டமைப்புக்கு வெட்கமில்லையா?” என்று கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும் கேட்டிருக்கிறார். “கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி உறவை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்கிறார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
ஆனால், “கூட்டமைப்பின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டியது. சும்மா வெறுவாய் சப்பிக்கொண்டிருக்காமல், மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்க வேணும். அதுவே பயனுள்ள செயல்.
அதற்காகப் புதிய அரசியல் கூட்டுகள் ஏற்படுவது தவறல்ல. இதுவரையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசியல் சக்திகள் முதல் தடவையாக சேர்ந்து இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு புதிய போக்கின் தொடக்கமாகும். இதில் சாதக, பாதகங்கள் ஏற்படலாம். அதைப் பேசி, விவாதித்துத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆகவே இதை முதலில் வரவேற்க வேணும்” என்று சிலர் கூறுகிறார்கள்.
இப்படி இந்தப் புதிய சூழலைப்பற்றி பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் எதிராகவும் ஆதரவாகவும் முன்வைக்கப்படுகின்றன. அதிகமும் பதற்ற நிலையிலான – எதிர்நிலையிலான அபிப்பிராயங்களாகவே உள்ளன.
தொடக்கத்தில் இந்தப் புதிய நிலை உறவைப்பற்றிப் பலரும் பதறினார்கள். சமூக வலைத்தளங்களும் பத்திரிகைகளும் கொந்தளித்தன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “உதயன்” பத்திரிகை இந்தப் புதிய கூட்டினை, புதிய உறவினை கடுமையாக விமர்சித்துச் செய்திகளை வெளியிட்டது.
கடுமான விமர்சனத்தோடு ஆசிரியர் தலையங்கத்தையும் எழுதியிருந்தது. இவ்வளவுக்கும் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் உரிமையாளரும் வேறு யாருமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சரவணபவனே.
இதைப்போல சிறிதரனும் கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி உறவை விமர்சித்திருந்தார். ஆனால், இவர்கள் யாரும் கூட்டமைப்பின் உள்ளகக் கூட்டங்களில் இதைக் குறித்து கேள்வி எழுப்பப்போவதுமில்லை.
ஒழுக்காற்று நடவடிக்கைக்குக் கேட்கப்போவதுமில்லை. இதைப்போன்ற பல விடயங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன. குறிப்பாக சம்மந்தன் தேசியக் கொடியை ஏந்தியதை ஏற்க முடியாது.
அது தவறு என்று சொன்னவர்கள் சம்மந்தனுக்கு முன்பு அதைச் சொல்லவேயில்லை. கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டங்களில் அதை விமர்சிக்கவும் இல்லை.
இதைப்போலத்தான் சுமந்திரன் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிச் சொன்னதற்கும் விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்களை முன்வைத்ததற்கும் இதுவரையில் இந்தச் சிங்கங்கள் தலைமையின் முன்னே கர்ஜிக்கவேயில்லை. இது கூட்டமைப்பின் இரண்டாக நிலைப்பாட்டின் பாரம்பரிய வெளிப்பாடாகும்.
இதேவேளை “ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பதா? அதனுடைய தயவில் தங்கியிருப்பதா? அதனுடன் கூட்டு வைத்துக் கொள்வதா?” என்று தமிழ்த்தேசிய ஆதரவாளர்களாகத் தம்மைக் கருதிக்கொள்வோருக்கு இந்தப் புதிய போக்கினை ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருந்தது.
அதிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு கூட்டமைப்பின் எதிர்பார்த்திராத இந்தப் புதிய அரசியல் நடவடிக்கை மிகக் கடினமாக இருந்தது. இதை எண்ணும்போது அவர்களுடைய உடல் கூசியது. “எப்படி இதை ஏற்றுக்கொள்ளலாம்?” என்று அவர்களுக்குப் புரியவே இல்லை.
இதுவரையிலும் ஈ.பி.டி.பியை மதிப்பிறக்கம் செய்தே வந்தவர்களுக்கு, அதனுடைய தயவை நாடுவதென்பது எளிதாக இருக்காதுதான். ஆனால் கூட்டமைப்பிற்கு வேறு வழியிருக்கவில்லை.
ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, பிள்ளையான் போன்ற தரப்புகளோடு கூட்டு வைத்துக் கொள்ளவில்லை என்றால் ஆட்சியை அமைக்க முடியாது.
அப்படி ஆட்சி அமைக்க முடியாது என்றால், அந்த இடங்களில் கூட்டமைப்புக்கு எதிராக இருக்கும் சக்திகளிடம் ஆட்சியும் அதிகாரமும் சென்று விடும்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமும் கிளிநொச்சியில் சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பிடமும் கிழக்கில் சில இடங்களில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடத்திலும் மன்னார், முல்லைத்தீவில் வேறு தரப்புகளிடத்திலும் ஆட்சி சென்று விடும்.
அதிலும் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி அவர்கள் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள். எனவே அதற்கு வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை இன்று அதற்கு நேரடியான எதிரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே. தேர்தல் களங்கள் தொடக்கம் பொதுவாகவே எல்லா இடங்களிலும் இதை யாரும் அவதானிக்க முடியும். அதைப்போல தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு நேரடியான எதிரியாக இன்றிருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே.
எனவே, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்பதற்குக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
ஆகவே அதைத் தடுக்க வேண்டுமானால், ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, பிள்ளையான் போன்ற தரப்புகளோடு கூட்டமைப்புக் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இது தவிர்க்க முடியாது என்றாகியது. இல்லையென்றால் ஆட்சியையும் அதிகாரத்தையும் கூட்டமைப்பு இழக்க வேண்டி வரும்.
ஆட்சியையும் அதிகாரத்தையும் எப்படி இழப்பது? ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள சுவையை எப்படி இழக்க முடியும்? இந்த இடத்தில்தான் ஒரு குழப்பமும் தடுமாற்றமும் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக அதனுடைய அடிமட்டத்தினருக்கு. ஆட்சி அதிகாரத்துக்காக இதுவரையிலும் தம்மால் விமர்சிக்கப்பட்டு வந்த சக்திகளிடம் செல்வதா? அவற்றின் ஆதரவையும் தயவையும் பெற்றுக் கொள்வதா? என. இதையிட்ட விவாதங்கள் கூட்டமைப்பின் கீழ் மட்ட ஆதரவாளர்களிடத்திலே வலுவாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், மறுவளத்தில் கூட்டமைப்பின் தலைமையோ இதையிட்டு அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அது ஏற்கனவே அரச சார்பு நிலைப்பாட்டில், அரசுடன் இணங்கியே செயற்பட்டுக் கொண்டிருப்பதால், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதைப் பற்றியே சிந்திக்கிறது.
எனவே, ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றின் ஆதரவையும் தயவையும் நாடுவதில் அதற்கு எந்தப் பிரச்சினையுமில்லை. “கூழ் குடிக்க வேணுமென்றால், மீசை நனையத்தான் வேணும்”.
இதேவேளை ஈ.பி.டி.பிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சியில் உடன்பாடில்லை. கூட்டமைப்பை விட முன்னணி ஆபத்தானது என்ற தெரிவே ஈ.பி.டி.பியினுடையது. ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூட்டே இங்கே நிகழ்ந்திருக்கிறது.
ஆனால், இந்தப் புதிய உறவுச் சூழலைப்பற்றி குறிப்பிடத்தக்க அளவில் முறையான (முறையியல் சார்ந்த) கருத்துகளை முன்வைத்ததாகத் தெரியவில்லை.
பத்திரிகைகள் கூட நொட்டை, நையாண்டி, பதற்றம், சகிக்க முடியாமை என்ற நிலையிலேயே எழுதி வருகின்றன. இந்தப் புதிய அரசியல் நிலை தொடர்பாக ஏற்பட்ட – எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நன்மை, தீமை பற்றியோ சாதக பாதகங்களைப் பற்றியே விவாதிக்கவில்லை.
ஆட்சி அமைப்பதற்கு மட்டும் இணக்கம், உடன்பாடு, ஒத்துழைப்பு, ஒத்திசைவு என்றில்லாமல், அந்த ஆட்சியை எப்படி நிர்வகிப்பது, அதனூடான செயற்படு முறை என்ன? செயற் திட்டங்கள் என்ன? அவற்றின் அமூலாக்க முறை என்ன? எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் எத்தகைய அணுகுமுறைகள் பின்பற்றப்படும் என்பதையிட்டு இந்தப் புதிய அரசியலுறவில் உள்ள சக்திகளும் சரி, வெளித்தரப்பினரும் சரி அக்கறையோடு பேசியதாகவும் தெரியவில்லை.
ஒட்டு மொத்தத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக – இந்தப் புதிய அரசியல் ஒருங்கிணைவு பற்றி ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானங்களும் இல்லை. அதைப்பற்றிய கண்ணோட்டங்களும் இல்லை.
ஏதோ ஒரு மாதிரிச் சபைகளை இப்போதைக்கு அப்பிடி இப்பிடி ஆரதரவைத்திரட்டி அமைப்போம். மிச்சத்தைப் பிறகு பார்ப்போம் என்ற கணக்கில்தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன.
“கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் எத்தகைய தீர்மானத்தைத் தாம் எடுத்தோம்” என்றோ “சபைகளில் எவ்வாறான அடிப்படையில் செயற்படப்போறோம்” என்பதைப் பற்றியோ ஈ.பி.டி.பி எதையும் வெளியே தெரிவிக்கவில்லை.
அதைப்போல, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பும் தாம் “எவ்வாறு இந்தச் சபைகளை நிர்வகிக்கப்போகிறோம்” என எத்தகைய திட்டங்களையும் பகிரங்கப்படுத்தவில்லை.
ஆகவே இத்தகைய உள்ளொடுக்க நிலை என்பது பழைய பாரம்பரியத்தை விட்டு, புதிய வெளியாக மலராது. மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கும் பொருத்தமான விளைவுகளை உண்டாக்காது.
இதனால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை. துயர்தோய்ந்த வரலாற்றையும் வாழ்வையும் கொண்டிருக்கும் சமூகமொன்று தன்னுடைய எதிர்கால நன்மையைக் குறித்துச் சிந்திப்பதற்கான வழிமுறை இதுவல்ல. அறிவார்ந்த சமூகமொன்றின் செயற்பாடாக இருக்க வேண்டியது புதிய நிலைகளைக் குறித்த பொருத்தமான சிந்தனைகளே!
புதியதொரு ஜனநாயகச் சூழலை உருவாக்கும் விதமாக மக்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இதை அனைத்துச் சபைகளிலும் நாம் கவனிக்க முடியும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறையும் இதற்கமைய உருவாக்கப்பட்ட ஒன்றே. ஆனால், இதையெல்லாம் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆகவே பழைய பாதையில்தான் இந்தப் பயணமும் நடக்கப் போகிறது. பெருமூச்சுகளும் சலிப்புகளுமே மிஞ்சும் காலம் தமிழரை விட்டு இப்போதைக்கு நீங்கப் போவதில்லை.
– `கருணாகரன்