இலங்கையில் கடந்த மூன்று வருட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தியத் திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்வதற்காக புது டில்லி முக்கிய பிரமுகர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப உள்ளது.
சீனா தனது திட்டங்களை எவ்விதமான தடைகளும் இன்றி இலங்கையில் முன்னெடுத்து வரும் நிலையில் இந்தியத் திட்டங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளமையானது டில்லியின் கடும் அதிருப்திக்கு காரணமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இந்நிலையில் உலகின் நான்காவது பெரிய வங்கியான சீன வங்கி தனது கிளையை இலங்கையில் ஸ்தாபித்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளிலும் 600க்கும் கிளைகளைக் கொண்டுள்ள இந்த சீன வங்கி கொழும்பில் தனது கிளையை ஸ்தாபித்ததன் ஊடாக இலங்கை – சீன நவீன பொருளாதாரத்தின் முக்கியமான பிரவேசமாகக் கருதப்படுகின்றது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;.
சீன அரசாங்கத்தின் மிகப் பிரமாண்டான நிதி நிறுவனமாக கருதப்படும் சீன வங்கி , 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் தெற்காசியாவிற்கான முதலாவது வங்கிக் கிளையை இலங்கையில் ஸ்தாபித்துள்ளது.
இவ்வாறு தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீனா தனது புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை நோக்கிய நகர்வுகளை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக சீனாவின் தெற்காசியாவுக்கான முன்னெடுப்புகள் ஏதோ ஒரு வகையில் இந்தியாவை மட்டுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
தெற்காசியாவில் மிகவும் வலுவான நாடாகத் திகழ்வதற்கு சீனாவும் இந்தியாவும் கடும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தெற்காசிய கடற்பரப்பில் இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சீனா மிக ஆழமாகக் கால் பதித்துள்ளது.
சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் ஆசிய கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது , இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் பெரும் அச்சுறுத்தலான நிலைமையை உருவாக்கும் . அந்த அச்சுறுத்தலானது இந்தியாவுக்கு பெரும் சவாலாக அமையும் .
ஆபிரிக்க முனை – டிஜிபோட்டில் அமைக்கப்பட்டுள்ள சீன கடற்படை தளம் மற்றும் பாகிஸ்தான் குவாடர் துறைமுகம் போன்று இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் காணப்படக் கூடும் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு மாத்திரமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் உள்ளது.
இதேவேளை இலங்கையுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகள் சீனாவுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கியதாகவே உள்ளது.
இலங்கையில் ஆட்சி மாறினாலும் சீனத் திட்டங்களுக்கு எவ்விதமான தடைகளும் ஏற்பட வில்லை. எனினும் 10 க்கும் மேற்பட்ட இந்தியாவின் பாரிய திட்டங்கள் பல இழுபறி நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் (எட்கா)மத்தல விமான நிலைய கூட்டு முயற்சி ஒப்பந்தம் , பலாலி விமானத் தளம் மற்றும் திருகோணமலை எண்ணெய் விவகாரம் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம் சீனா வசம் காணப்படுகின்ற நிலையில் மத்தல விமான நிலையமும் பெற்றுக்கொள்ளப்பட்டால் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தன்னாதிக்க போக்கு மேலும் தீவிரமடையும் என இந்தியா கருதுகிறது.
இலங்கையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுவாக்கும் வகையில் சீன வங்கிக் கிளை உருவாக்கப்பட்டமையானது இந்தியாவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டுக்குள் இழுபறி நிலையில் உள்ள 10க்கு மேற்பட்ட இந்திய திட்டங்களை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் என்ற போக்குடன் டில்லி செயற்பட ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் டில்லியின் முக்கிய பிரநிதி ஒருவர் விரைவில் இலங்கைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.