தேசியக்கொடி எரித்த ஆசிரியர் கைது…!

காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசியக்கொடியை எரித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் அருகே சுவாமி மலையைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். அவ்வம்மைப்பின் கூட்டங்களில் அவர் தவறாமல் கலந்துகொள்வார். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு இந்திய தேசியக்கொடியை எரித்து அதை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதை வைரலாக பரவ போலீஸார் நேற்றிரவு அவரைக் கைது செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.

தேசியக்கொடியை எரிக்கும் முன் அவர் வீடியோவில் பேசியுள்ளார். அதில், “காவிரி உரிமையை மறுக்கிற இந்திய அரசைக் கண்டித்து தேசியக்கொடியை எரிக்கிறேன். தமிழர்களின் உரிமைகளான மண் உரிமை, கடல் உரிமை என அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு மறுக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தை அழிவின் விளிம்பில் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. மீனவர்களை இலங்கை சுட்டுகொன்றபோது கேள்விகேட்காத மத்திய அரசு நம்முடைய வரிப் பணத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறது. மீத்தேன், நியூட்ரினோ என அத்தனை அழிவு திட்டங்களையும் தமிழகத்தின் மீது திணிக்கப்படுகிறது. இதற்காக, இளைஞர்களே உங்களை எரித்துக்கொள்ளாதீர்கள். அதற்குப்பதில் தேசியக்கொடியை எரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.