தெலுங்கானா சபாநாயகருக்கு, தொண்டர்கள் பால் அபிஷேகம் செய்துள்ள சம்பவம், கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, சபாநாயகராக இருப்பவர், ஸ்ரீகோண்டா மதுசூதனா சாரி. வாரங்கல் மாவட்டத்தின் பூபாலப்பள்ளி தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர். சமீபத்தில், தெலுங்கானா சட்டசபையில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 4000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பஞ்சாயத்துகளாக மாறின. இதில், 1500-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களும் அடங்கும். இந்தச் சட்டத்தினால், தனது தொகுதிக்குட்பட்ட அரேபல்லி கிராமத்தைப் பஞ்சாயத்தாக மாற்றுவதாக சபாநாயகர் மதுசூதனா அறிவித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை, இதுதொடர்பான விழா நடைபெற்றுள்ளது. அப்போது, தங்களது கிராமத்தை பஞ்சாயத்தாக அறிவித்தற்காக, சபாநாயகர் மதுசூதனாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பால் அபிஷேகம் செய்தனர். `ஜெய் தெலங்கானா’ கோஷத்துடன் அர்ஜுனின் ‘முதல்வன்’ படப் பாணியில் அவருக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் காட்சிகள், தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுவரை கட் அவுட், பேனர்களுக்கு மட்டுமே பால் அபிஷேகம் செய்யப்பட்டுவந்த நிலையில், இந்தச் செயல் கடும் விமர்சனத்தை உண்டாகியுள்ளது. பலரும் இந்தச் செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
#WATCH Milk poured on Telangana assembly speaker S. Madhusudhana Chary by his followers at an event in Bupalapelli district of Telangana. pic.twitter.com/3O0ynzamoY
— ANI (@ANI) April 1, 2018