தண்ணீர், மிருகம், பிரமிட்… செவ்வாய் கிரகம் பற்றி குழப்பும் சதிக் கோட்பாட்டாளர்கள்!

அந்தத் தெருவில் ஒரு பழைய வீடு பூட்டிக் கிடந்தது. சுமார் ஆறு மாதங்களாக அந்த ஏழு லீவர்கள் கொண்ட திண்டுக்கல் பூட்டுதான் அந்த வழியே சென்றவர்களை பார்த்து இளித்துக் கொண்டிருந்தது.

ஆறு மாதம், இன்னும் பல மாதங்கள் ஆனபோது அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கு ஒரு பேரார்வம் மேலிட்டது.

அப்படி அந்த வீட்டிற்குள் என்னதான் இருக்கிறது? ஒரு நாள், கிரிக்கெட் விளையாடச் சென்ற சிறுவர்கள் பந்தை அந்த வீட்டிற்குள் அடித்துவிட, எங்கே விழுந்தது என்று பார்க்க ஜன்னலுக்குள் தலையை விட்டனர்.

உள்ளே ஏதோ சத்தம் கேட்க, ஒரு பயந்த சுபாவம் கொண்ட சிறுவன், தான் ஏதோ ஓர் உருவத்தைப் பார்த்ததாக அலறிக் கொண்டு ஓட, அவ்வளவுதான்.

விரைவில், அந்த வீடு இருக்கும் தெருமுனையே பரபரப்பாகிப் போனது. ஆளுக்கு ஒரு முறை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து விட்டு, செத்துப் போன கமலா பாட்டி ஆவி அது ஆவியில்ல, கொள்ளிவாய் பிசாசு; அந்த வெள்ளை உருவம் பார்த்தியா?

அது ஒரு துஷ்ட சக்தி; அது ஒரு மிருகம்; என தங்கள் இஷ்டத்திற்குப் பெயர்களை வைத்தனர். ஒரு சிலர் விளையாட்டாக அதைக் கூறினாலும், பலர் அதை உண்மை என்றே நம்பினர்.

அதன் பிறகு அதன் அருகில் உள்ள கடைக்குச் செல்ல கூட அடுத்த தெரு வழியே சுற்றித்தான் வந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அந்த வீட்டை இடித்து விட்டு யாரோ காம்ப்ளெக்ஸ் கட்டிச் சம்பாதித்ததெல்லாம் வேறு கதை!

கிட்டத்தட்ட இதே கதைதான் இந்தச் செவ்வாய் கிரக ஆராய்ச்சியைச் சுற்றியும் நடந்து வருகிறது. நாசா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தை விதவிதமாக படம் பிடித்துக் காட்ட, ஒவ்வொரு படத்தை வைத்தும் ஒவ்வொரு கதையை சிலர் முன் வைக்கின்றனர்.

கான்ஸ்பிரசி தியரிஸ்ட்ஸ் ( Conspiracy Theorists) எனப்படும் சதிக் கோட்பாட்டாளர்களான இவர்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒரு புது சர்ச்சையைக் கிளப்பி கொண்டே இருக்கின்றனர்.

கிட்டதட்ட இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்று கூவும் கும்பல் போலத்தான் இவர்களும். சோகம் என்னவென்றால் இவர்களில் பலர் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள்.

தன் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘கியுரியோசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் ‘மாஸ்ட்கேம்’ ( Master Camera) கொண்டு விதவிதமான கோணங்களில் நமக்குப் படங்கள் கொடுத்த வண்ணம் உள்ளன.

இந்தப் புதிய படங்கள் மட்டுமின்றி, ஒரு சில பழைய படங்களை வைத்தும்கூட, இந்தப் பலவித அனுமானங்கள் ஆராய்ச்சியாளர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.  அப்படி நடந்த சில சுவாரஸ்ய செவ்வாய் கிரக கணிப்புகள் இதோ…

சென்ற வாரம், சாம்பல் நிற போர்வை போர்த்தப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தாக்கு படம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. இது 13 வருடங்களுக்கு முன்பு நாசா எடுத்த புகைப்படம்.

இதில் அந்தப் பள்ளத்தை உற்று நோக்கினால், ஏலியன் ஒன்றின் தலை போல இருக்கும். எனவே, இதற்கு நாசா ‘ Chryse Alien Head’ என்று பெயரிட்டது.

“இது ஏலியன் இருப்பதை உறுதி செய்கிறது” என்று கூறி  UFOmania என்ற யூடியூப் சேனல் ஒன்று வீடியோ ஒன்றை அப்லோடு செய்ய அது உடனே வைரலாகி போனது. மற்றொரு கும்பல் “செவ்வாயில் முன்னர் தண்ணீர் இருந்திருக்கலாம்.

அது வேகமாக ஓடியதால் இப்படி ஓர் உருவம் இயற்கையாக உருவாகி இருக்கலாம்” என்று ஒரு கருத்தை முன்வைத்தது. ஒரு நிமிடம் தலை சுற்றிப் போன நாசா, “இது செவ்வாயில் விழுந்த விண்கற்களால் உருவான பள்ளத்தாக்கு இது!” என்று விளக்கம் அளித்தது.

அறிவியலாளர்கள் சிலர், “ஏலியன் என்று பெயர் வைத்தது சீக்கிரம் புரிந்து கொள்ள மட்டுமே.

மேலும், ஏலியனுக்கு உருவம் என்ற ஒன்றே திரைப்படங்கள் கொடுத்ததுதான். ஏலியன் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதே வெறும் கற்பனைதான். அதை வைத்துக் கதை கட்டுவது எல்லாம் பொறுப்பற்ற செயல்” என்று எச்சரித்தனர்.

இதே போல, வெவ்வேறு படங்களை எடுத்துக் கொண்டு, இதில் ஒரு மிருகத்தின் தொடை எலும்பு தெரிகிறது. செவ்வாய் கிரகத்தில் பூமிக்கு முன்பே டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.

இந்த உண்மையை நாசா உங்களுக்குக் கூறாது என்று ஒரு கூட்டம் கலகம் செய்தது. இவர்கள் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து ஆராயும் குழுவாம். பூமியிலும் வேற்றுக்கிரக வாசிகள் அடிக்கடி வந்து போனதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளன என்று இவர்கள் அறிக்கை விட்டனர். பின்பு, அந்தச்  செவ்வாய் கிரகப் படம் ஓர் ஒளி விளையாட்டு மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டது.

மற்றொரு படத்தில், பாறை இடுக்குகளுக்கு இடையே பிரமிட் போன்ற உருவம் தெரிவதாக கிளப்பிவிட்டனர். இதை வைத்து பண்டைய எகிப்தியர்களின் மூதாதையர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தார்கள் என்று கற்பனைக் குதிரையை தட்டி விட்டனர்.

இது ஒளியின் தந்திரமல்ல என்று அவர்களே உறுதியும் செய்து கொண்டனர். “இது என்னடா வம்பு” என்று இதற்கு மறுப்பு தெரிவிக்க யாரும் வரவில்லை.

Animal_Herd_Courtesy_YouTube_09437  தண்ணீர், மிருகம், பிரமிட்... செவ்வாய் கிரகம் பற்றி குழப்பும் சதிக் கோட்பாட்டாளர்கள்! Animal Herd Courtesy YouTube 09437

தற்போது, யூடியூப் சேனல் ஒன்றை நடத்தும் பிரபல சதிக் கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆடு, மாடு போன்ற மிருகங்கள் மந்தையாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம்பெற்று உள்ளது. இதை வைத்து, “செவ்வாய் கிரகத்தில், மிருகங்கள் வாழ்கின்றன; அதோ தொலைவில் பாருங்கள் நீர் கோடுகள் தெரிகின்றன.

இத்தனை நாள்கள் நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் நம்மை ஏமாற்றி வருகின்றன” என்கிற ரீதியில் கதை அடித்து விட்டுள்ளார்.

ஆனால், அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கினால், அது ஒளியின் விளையாட்டு என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, இந்தப் படங்கள் அனைத்தும் மிக மிகத் தரம் குறைவான  low-resolution படங்கள். அதை வைத்து ஆராய்ச்சி செய்வது எந்த அளவிற்கு உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் என்பது புரியவில்லை.

இந்த வகை ஆதாரமற்ற தகவல்களை உண்மை போல கதைகட்டி விடும் மனிதர்களுக்குத் தேவை கொஞ்சம் புகழும், யூடியூப் வியூஸ்களும்தான்.

இவர்கள் ஒருவகை என்றால், இதை உண்மை என்று முற்றிலும் நம்பிப் பேசும் மனிதர்கள் ஒரு வகை. இவர்களாக உண்மையை உணர்ந்து நாம் மக்களிடையே தேவையற்ற பீதியைக் கிளப்புகிறோம் என்று வருத்தப்பட்டு மாறினால்தான் உண்டு. அது சரி, நீங்கள் ஒரு செய்தி பொய்யானது என்பதை எப்படிக் கண்டறியலாம்?

இவ்வகை புரளிகள் பெரும்பாலானவை படங்களை மையப்படுத்தியே பரவுகின்றன. அந்தப் படங்கள் நம்மிடையே ஒரு நம்பகத்தன்மையை கிளப்பி விடுகின்றன. அதுவும் இவை பரவுவது பெரும்பாலும் வாட்ஸ் ஆப் அல்லது ஃபேஸ்புக்கில்தான்.

அப்படி ஏதேனும் ஒரு தகவல் உங்களுக்கு வந்தால், அந்தப் புகைப்படத்தை கூகுள் சர்ச்சிற்கு உட்படுத்துங்கள். கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து ” search google for this image” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அந்தப் படத்தின் ஜாதகமே உங்களுக்குக் கிடைக்கும். ஒரு சில சமயங்களில் ஒரே படத்தை வைத்துக் கொண்டு விதவிதமான கதைகள் கூட உலா வந்திருக்கும். இணையம் சூழ் உலகில், புரளிகளைப் பரப்புவதும் சுலபம், அது உண்மை இல்லை என்று கண்டறிவதும் சுலபம். பொறுப்புடன் செயல்படுவது நம் கடமை.