சிறிசேனவின் சகாக்கள் சீனாவில் கோத்தாவை சந்தித்தனர்!

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சீன ஜனாதிபதி சிறிசேனவிற்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோத்தபாய ராஜபக்சவையும் தனித்தனியாக தனது நாட்டிற்கு அழைத்துள்ளது.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு சீனா ஏற்பாடுகளை செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துரலி ரத்தின தேரர் அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க உட்பட ஐவர் கொண்ட குழுவை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீனா செல்லவில்லை.

மார்ச் 28 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட சிறிசேனவின் ஆலோசகர் சிரால் லக்திலக தலைமையிலான குழுவினர் அங்கு கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இருதரப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் வெளியாகாதபோதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொது எதிரணிக்கும் இடையில்  இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கலாம்  என தகவல்கள் வெளியாகியுள்ளன

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.