7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையுடன், புசல்லாவ பகுதியில் சந்தேகநபர்கள் நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த புசல்லாவ பொலிஸாரால் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றினை புசல்லாவ பொலிஸார் சோதனையிட்டபோது, காரினுள் இருந்து புராதன உரிமம் உடைய 7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, 30, 35 மற்றும் 40 வயதுகளை உடைய மாவத்தகம, எய்யந்துடுவ, நிட்டம்புவ மற்றும் கொத்மலை பகுதிகளைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 தலை நாகத்தைக் கொண்ட புராதன புத்தர் சிலை, அசிட் போத்தல்கள் மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றைய தினம் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.