காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க் கட்சிகள் சென்னையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைகக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம்அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர், சாலையில் அமர்ந்து கறுப்புக்கொடி பிடித்து போராட்டம் நடத்தினர். சாலை மறியலைத் தொடர்ந்து, தற்போது அண்ணா சமாதி நோக்கி பேரணியாகச் சென்று, உழைப்பாளர்கள் சிலைக்கு அருகே சாலையில் அமர்ந்து தொடர் கோஷங்களை எழுப்பிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
எதிர்க் கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன, சென்னையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்றனர்.