கம்ப்யூட்டர் வெடித்து சாஃப்ட்வேர் எஞ்சினியர் பலி..!

மேலூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் எஞ்சினியர், கம்ப்யூட்டர் வெடித்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அனுமார்கோவில் பகுதியைச் சேர்ந்த சாஃப்ட்வேர் எஞ்சினியரான ரகுநாதன் மேலூர் பேங்க் ரோட்டில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தவர், கடந்தாண்டு தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலூரில் வசித்து வருகிறார். நேற்று இரவு 11 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கம்ப்யூட்டர் வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்டு வீட்டின் வெளியே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு, அங்கு வந்த பக்கத்து வீட்டினர் பயங்கர தீக்காயங்களுடன் கிடந்தவரை உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் சீரியஸான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கம்ப்யூட்டர் வெடித்து

கம்ப்யூட்டர் வெடித்து ரகுநாதன் உயிரிழந்த சம்பவம் மேலூர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ரகுநாதனின் தந்தை துரைப்பாண்டியனும் ஓராண்டுக்கு முன்பு  வீட்டில் இருக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் கொட்டி உயிரிழந்திருக்கிறார். அந்த சோகம் மறையும் முன் ரகுநாதனின் உயிரிழப்பு உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலூர் போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.