வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசுகையில், “வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வை நடத்துவதன் மூலம் அதனை தடுக்க முடியாது. இந்த விடயம் குறித்து நடாளுமன்றில் பேச வேண்டும். அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வர முடியும். எனினும், அவ்வாறான சந்தரப்பங்களில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருக்க மாட்டார்கள்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் பேசி விரைவில் முடிவு எட்டப்பட வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை தென்னிலங்கை தலைமைகளே தீர்மானிக்க வேண்டும்.
வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும். இதனை தென்னிலங்கை தலைமைகள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.