ஆம்பூரில் ஒற்றை மனுஷியாக பேருந்தை மறித்த 55 வயது பெண்மணிக்கு வாழ்த்து தெரிவித்து தன்னை சந்திக்கும்படி அழைப்புவிடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மோடி அரசைக் கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ், விவசாய சங்கங்கள், சி.பி.எம், சி.பி.ஐ என அனைத்து கட்சிகளின் சார்பில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு முழு அடைப்பு போராட்டம் நடந்தது. முழு பந்த் நடத்தவிடாமல் செய்வதற்காக தமிழக அரசு, பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு நேற்று காலை வழக்கம் போல் பேருந்துகளை இயக்கியது. வேலூரில் இருந்து சென்னை, சேலம், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கியது.
அதன் படி, ஆம்பூர் தி.மு.க நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமையில், நேற்று காலை 8 மணி அளவில் ஆம்பூரில் பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்த ஆம்பூர் நிலையம் அருகே ஒன்றுகூடினர் தி.மு.கவினர். அதில் ஆம்பூர் 28 வார்டு மகளிர் அணி துணை செயலாளர் தெய்வாணை கலந்துகொள்ள பஸ் நிலையம் அருகே வந்தார். அப்பொழுது திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து ஆம்பூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இதனைப் பார்த்த தெய்வாணை ஒன்றை பெண்மணியாக தி.மு.க கொடியை கையில் எடுத்துகொண்டு நாற்கர சாலையின் குறுக்கே சென்று அந்தப் பேருந்தை மறிக்கச் சென்றார்.
ஆனால் இதனை சுதாரித்துகொண்ட ஓட்டுனர் பேருந்தை வேகமாக இயக்க முயன்றார். ஆனால் பேருந்தை போக விடாமல் மறித்த தெய்வானை, ” எங்க தளபதி தமிழ்நாட்டுக்கு தண்ணி கெடைக்கணும்னு சொல்லி இன்னைக்கு பஸ் எல்லாம் ஓடக்கூடாதுனு சொல்லி போராட்டம் நடத்திட்டு இருக்கிறாரு. நீங்க என்னடானா பஸ்ஸ ஓட்டுரீங்க. டிரைவரே பஸ்ஸ விட்டு இறங்கு இல்லனா நடக்குறத வேற என டிரைவரை எச்சரித்தார்.” அந்த பஸ் டிரைவரோ, இப்போ மட்டும் விட்டுடுங்க அடுத்த முறை வரமாட்டேன் என கெஞ்சினார். உடனே அங்கிருந்த கட்சி ஆட்கள் தெய்வானையை சமாதனப்படுத்தி ஓரமாக அழைத்துவந்தனர்.
தெய்வாணை, தனியாக பஸ்சை மரித்தது வீடியோவாக சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெய்வாணைக்கு பாராட்டுகள் தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளனர். அதுமட்டுமின்ற தன்னை நேரில் சந்திக்கும்படி அழைப்புவிடுத்துள்ளார். இது தெய்வாணைக்கு மற்றும் நகரசெயலாளர் ஆறுமுகத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நாளை மு.க.ஸ்டாலினை சந்திக்கச் செல்கிறார் தெய்வாணை.