ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மிராபாய் சானு 48கிலோ எடை பிரிவில் தங்கப் பதகத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
23 வயது பளுதூக்கும் வீராங்கனையான மிராபாய் சானு கடந்த வருடம் 48 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.
யார் இந்த மிராபாய் சானு?
மணிப்பூரில் இம்பாலில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று பிறந்தார் மிராபாய். குழந்தையாக இருக்கும்போதே இந்திய பளுதூக்கு வீராங்கனை குஞ்சுராணி தேவியின் மிகப்பெரிய ரசிகையாகவும் இருந்திருக்கிறார்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சுராணி தேவி இந்தியா சார்பாக பங்கேற்றது அவரது மூளையில் நன்றாக பதிந்தது, அவரும் பளுதூக்கும் வீரராக வேண்டும் என முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் அவருக்கு பயிற்சி செய்ய தகுந்த இரும்பு பொருட்கள் இல்லை. இதனால் மூங்கில் கட்டைகளை வைத்து பயிற்சி செய்தார். அருகிலுள்ள பயிற்சி மையத்திற்கு செல்வதற்காக சுமார் 50 -60 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார்.
அவருக்கு அன்றாடம் பால் மற்றும் கோழிக்கறி தேவைப்பட்டபோது அவரது பெற்றோர்களால் அதனை மிராவுக்கு அளிக்கமுடியாத நிலையில் இருந்தனர். ஆனால் இவை எல்லாம் மிராவின் பயணத்தை தடைபோடவில்லை.
பதினைந்து வயத்துக்குட்பட்டோருக்கான போட்டிகளில் மிரா சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு வயது 11, ஜுனியர் சாம்பியன் பட்டத்தை வென்றபோது வயது 17. கடந்த 2016-ம் ஆண்டில் தனது முன்மாதிரியான குஞ்சுராணியின் 12 வருட சாதனையை 192 கிலோ எடையை தூக்கியதன் மூலம் தகர்த்தெறிந்தார்.
இன்னமும் மிராபாய்க்கு வருமானம் என்பது பிரச்சனையாகவே இருக்கிறது. அடுத்து வரவுள்ள ஒலிம்பிக்கிற்கு அவர் தகுதி பெற்றால் மட்டுமே அவர் பளுதூக்குதலில் தொடர்ந்து ஈடுபடுவார். இல்லையெனில் அதனை விட்டுவிடுவார்.
கடந்த ஆண்டு உலகசாம்பியன் வென்ற மிரா கடந்த 2014-ல் ஏற்கனவே கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஆனால் இந்த முறை தங்கப்பதக்கத்தை வெல்லும் முனைப்போடு இருந்த அவர் அதனை சாதித்து காட்டியுள்ளார்.
பளுதூக்குதலுக்கு அப்பால் மிராபாய் நாட்டியத்தில் விருப்பமுடையவரார். பிபிசி பேட்டியொன்றில் அவர் சிரித்து கொண்டே ” சில சமயங்களில் நான் கதவைச் சாத்திவிட்டு எனது மனம் போன போக்கில் நடனமாடுவேன். எனக்கு சல்மான்கான் படங்கள் என்றால் பிடிக்கும்” என்றார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மீது முழு கவனம் செலுத்தி வருகிறார் மிராபாய்.
இந்தியாவின் முதல் பதக்கம்
முன்னதாக 56 கிலோ பளு தூக்கும் போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கே.பி. குருராஜா வெள்ளிபதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார்.
கர்நாடகாவின் குந்தாபூரை சேர்ந்த குருராஜாவின் தந்தை ஓட்டுநர் ஆவார். குருராஜாவின் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்.
கர்நாடகாவின் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் கல்வி பயின்ற குருராஜா தனது பளுதூக்கும் கனவை அங்கிருந்தே தொடங்கியுள்ளார்.
2016ஆம் நடைபெற்ற சீனியர் பளு தூக்கும் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற பெருமை பெற்றவர் குருராஜா.
கவுஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய போட்டிகளில் தங்க பதக்கத்தையும் வென்றுள்ளார் குருராஜா.