அரிய வகை மானாக இந்தியாவில் காணப்படும் கலைமானை வேட்டையாடியதால் இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2 கலைமான்களை வேட்டையாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இந்த தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை கலைமான்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.
கலைமான்கள் வாழும் இடங்கள்
ஆங்கிலத்தில் கறுப்பு மான் என்ற பொருளில் அழைக்கப்படும் கலைமான்கள் பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், அமெரிக்கா, அர்ஜென்டினாவில் வாழ்கின்றன.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்ற இந்த வகை மான்கள், சில பகுதிகளில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.
இவை வாழ்ந்து வருகின்ற இடங்கள் தொடர்ந்து சுருங்கி வந்தாலும், இன்னும் சில இடங்கள் எஞ்சியுள்ளன.
வாழும் இடங்களில் ஏற்படும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்கின்ற பண்பை இந்த மான்கள் பெற்றுள்ளன.
இருப்பினும், மக்கள்தொகை பெருக்கம், செல்ல விலங்குகள் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த வகை மான்களின் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடையும், எண்ணிக்கையும்
“விலங்குகளின் பட்டியல் 1ல் இடம்பெற்றுள்ள கலைமான்களை வேட்டையாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று உதய்பூர் தலைமை வனப்பாதுகாவலர் ராகுல் பாட்நகர் தெரிவித்தார்.
இந்த வகை மான்கள் பொதுவாக சமவெளி மற்றும் பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. இப்பகுதி மனிதர்கள் எளிதில் இனம் காண்பதால் இவை மிகவும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பாதுகாக்க கண்டிப்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஆண் கலைமான்கள் 34 முதல் 45 கிலோ எடையுடையதாக இருக்கும். தோள் வரை 74 முதல் 88 சென்டிமீட்டர் வரை உயரம் கொண்டவை.
31 முதல் 39 கிலோ வரை எடையுடைய பெண் கலைமான்கள், ஆண் கலைமான்களைவிட சற்று உயரம் குறைவானவை.
ஆண்களை போல வெள்ளை நிறமுடைய பெண் கலைமான்களும் உள்ளன.