தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி.டி.வி.தினகரன் முக்கிய வேண்டுகோள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

டி டி வி தினகரன்

காவிரி போராட்டம் நடந்துவரும் இச்சூழ்நிலையில், போராட்டத்துக்கு மேலும் ஆதரவு திரட்டும் பொருட்டு இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை தற்போது வலுப்பெறத் தொடங்கியுள்ளது. தமிழ் அமைப்புகள் பலவும், இந்தக் கோரிக்கையை சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் எனக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர்ப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நமக்கு இழைக்கும் துரோகத்துக்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது. விவசாயிகளின் வேதனையில் பங்கெடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என நாள்தோறும் நடத்தி, தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்திவரும் இந்த நேரத்தில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது. காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.