கோவையில் கைது செய்யப்பட்ட, தி.மு.க-வினர் மதுபாட்டிலை அனுமதிக்காத போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகளும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
கோவையிலும், சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் எனp பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கோவை கணபதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவகத்தை தி.மு.க-வினர் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, மது பாட்டில்களை உள்ளே அனுமதிக்காத, போலீஸாருடன் தி.மு.க-வினர் வாக்குவாதம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தி.மு.க-வினருக்கு மதுபாட்டில் கொண்டுவந்தவரை, போலீஸார் திருமண மண்டபத்தின் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க-வினர், “நாங்க எல்லா இடத்துலயும் கைதாகிட்டு இருக்கோம்… நீங்கதான் ரொம்ப பண்றீங்க. இப்ப இதுல என்ன இருக்கு.
அ.தி.மு.க காரங்க பிரியாணியோட சரக்கு அடிக்கறப்ப தடுத்தீங்களா??..காலைல 6 மணிக்கு… நைட் 12 மணிக்கு பிளாக்குல விக்கறவங்கள புடிச்சீங்களா?? கஞ்சா விக்கறவங்கள புடிச்சீங்களா??” எனக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், “மது பாட்டிலை எல்லாம் அனுமதிக்க முடியாது” என போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.