சிறீதரன் எம்.பியின் காரசாரமான கேள்விக் கணைகளால் திக்குமுக்காடிப் போன கூட்டமைப்புத் தலைமை!!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாரைக் கேட்டு ஈ.பி.டி.பியின் ஆதரவை கேட்டீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்னி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது சிறீதரன் எம்.பி கேட்ட கேள்வியால் அங்கு காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளமை தொடர்பில் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“யாரைக் கேட்டு ஈ.பி.டி.பியுடன் பேசியுள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் தலைமை,

“ஈ.பி.டி.பியுடன் நாங்கள் பேசவில்லை. மதத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினரே பேசினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி, “அப்படியானால் அவர்களே பேசவேண்டியதுதானே. ஏன் மாவை, மற்றும் சுமந்திரன் டக்ளஸ் உடன் தொலைபேசியில் பேசினார்கள்? என்று கேட்டுள்ளார்.

மேலும் மாவையை நோக்கி, “நாராந்தனையில் உங்கள் தலையில் வெட்டு விழுந்தது. இருவர் உயிரிழந்தனர். அதை எல்லாம் மறந்து டக்ளஸ் உடன் எப்படி பேசினீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறீதரனின் இந்த கேள்விகளுக்கு “நாங்கள் ஆதரவு கோரிப் பேசவில்லை” என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்தார் சிறீதரன், இதேவேளை டக்ளஸ் உடன் பேசியமை தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும்சுட்டிக்காட்டியுள்ளார்.