`நடனம் ஆடி விருது பெற வந்த தொழிலதிபர்’ – மேடையிலேயே உயிரிழந்த சோகம்!

சிறந்த தொழிலதிபர் விருதைப் பெற வரும்போது மேடையிலேயே தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விஷ்ணு பாண்டே. 53 வயதான இவர் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் டெல்லி ஆக்ரா பகுதியில் தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட விஷ்ணு பாண்டேவுக்கு சிறந்த தொழிலதிபருக்கான விருது அறிவிக்கப்பட்டது. விருது அறிவிக்கப்பட்டவுடன், உற்சாக மிகுதியில் நடனம் ஆடிக்கொண்டே விருதை வாங்க வந்தார் விஷ்ணு பாண்டே.

அப்போது, நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.