விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு நிமிடங்கள்தான். அதுவும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே பிரபாகரனுடன் சேர்ந்து நிற்பது போன்று போலியாக புகைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்.
புலிகளின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிக்கிறார்.
பிரபாகரன் இல்லை என்று நினைத்து புலிகளின் சின்னத்தை தனது கட்சிக்கொடியில் வைத்திருக்கிறார்” என்று அடுக்கடுக்காக சீமான் மீது குற்றம் சாட்டியிருக்கிறார் வைகோ.
இதில் மிக அதிர்ச்சிகரமானது, “பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படம் போலியானது” என்பது தான்.
சர்ச்சையை ஏற்படுத்திியருக்கும் படம் 1 (சீமான் – பிரபாகரன்)
புலிகளின் கட்டுப்பாட்டில் ஈழத்துக்குச் சென்று பல நாட்கள் இருந்ததோடு, பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர் வைகோ. இருவரும் சேர்ந்து நிற்கும் படங்கள் பல ஆதாரமாக உள்ளன. ஆகவே வைகோ சொல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணனும், “பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலி தான்” என்றும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:
“பிரபாகரன் அவர்கள் எனக்கு 1983ம் ஆண்டிலிருந்து பழக்கம். புலிகள் இயக்கத்தினர், கோவை பகுதியில் பயிற்சிபெற என்னாலான முயற்சிகளை மிகப் பிரயாசைப்பட்டு செய்தேன். இது அனைவருக்கும் தெரியும்.
ஈழத்துக்குச் சென்றும் பிரபாகரனை சந்தித்திருக்கிறேன். இந்திய அமைதிப்படை, ஈழத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஈழத்துக்குச் சென்று 15 நாட்கள் இருந்தேன். அதில் ஒரு வாரம் பிரபாகரன் தன்னுடைய முகாமிலேயே என்னை தங்க வைத்திருந்தார். அப்போது நிறைய பேசியிருக்கிறோம். அந்த காலகட்டத்தில் அவர் இறந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது.
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் படம் 2 (சீமான் – பிரபாகரன்)
நான் தமிழகத்தில் இருந்து செல்லும்போது மாலை நாளிதழ் ஒன்று வாங்கிச் சென்றிருந்தேன். ஆதாரத்துக்காக அதை பிரபாகரன் படிப்பது போல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. என்னுடன் அவர் இருப்பது போன்ற படங்களும் எடுக்கப்பட்டன. எல்லாம் பிரபாகரன் உத்தரவுப்படியே எடுக்கப்பட்டது” என்று அந்த நாட்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கினார்.
அவரிடம், “பிரபாகரனுடன் சீமான் இருப்பதாக வெளியிட்ட படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ சொல்லியிருக்கிறாரே…?” என்றோம்.
அதற்கு கோவை ராமகிருஷ்ணன், “பிரபாகரனை சீமான் பார்த்த்தே சில நிமிடங்கள் தான். அதுவும் திரைப்பட இயக்குநர் என்ற முறையில் வேறு சிலரை அழைத்ததைப் போல இவரும் அழைக்கப்பட்டார்.
விடுதலைப்புலிகள் வீழும்வரை, இது போன்ற ஒரு புகைப்படத்தை சீமான் வெளியிடவில்லை. அதன் பிறகுதான் வெளியிடுகிறார்.
புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டது ராஜபக்சேவை விட சீமானுக்குத்தான் கொண்டாட்டமாக இருக்கிறது. பிரபாகரன் பெயரை வைத்து அரசியல் செய்ய முடிகிறது.
பிரபாகரனுடன் இருப்பதாக போலியாக ஒரு படத்தை தயாரித்து, உணர்ச்சிவசப்பட்ட அப்பாவி இளைஞர்களிடம் அரசியல் செய்ய முடிகிறது. புலிகளின் சின்னத்தை தனது கட்சிக் கொடியாக பயன்படுத்த முடிகிறது.
இதெல்லாம் புலிகள் வலிமையுடன் இருந்த காலத்தில் நடந்திருக்காது. ஆகவே புலிகள் வீழ்ச்சி, ராஜபக்சேவைவிட சீமானுக்குத்தான் கொண்டாட்டமாகப் போய்விட்டது” என்றார் கோவை ராமகிருஷ்ணன்.
அவரிடம், “அந்த புகைப்படம் போலி என்றால் அது குறித்து ஏன் நீங்கள் வெளிப்படையாக இதுவரை பேசவில்லை” என்றோம்.
அதற்கு அவர், “தெரிந்தோ தெரியாமலோ அவருடன் சில அப்பாவி இளைஞர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் தமிழுணர்வுள்ளவர்கள். அவர்களும் தமிழ்நாட்டு பிரச்சினைகளில் போராடுகிறார்கள்.
தவிர, இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு எங்களுக்கு ஊடக பலம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விடுதலைப்புலிகள் தரப்பிலேயே அந்தப் புகைப்படம் போலி என்பதை சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லை. இதனால் எல்லாம் நாங்கள் வெளிப்படையாக அது குறித்து பேசவில்லை” என்றார்.
பிரபாகரனுடன் கோவை ராமகிருஷ்ணன்
அவரிடம், “உங்களையும் தெலுங்கர் என்று விமர்சிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”என்றோம்.
அதற்கு அவர், ”நான் முழுமையான தமிழனாக வாழ்கிறேன் என்பதை சொல்லித் தெரிவதில்லை. என் போராட்டங்களை அறிந்த அனைவருக்கும் தெரியும். தவிர அப்படி என் மீது விமர்சனம் வைப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
தமிழர்களுக்குள் வேண்டுமென்றே பிளவை ஏற்படுத்த, தமிழர்களுக்கு எதிரான சக்திகளிடம் கூலி பெற்றுக்கொண்டு, சிலர் இப்படி தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள் என்பதை உணர்கிறோம்.
ஆகவே இப்போது எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டியிருக்கிறது” என்றவர், “தவிர மாற்று இனத்தவர் என்ற பிரச்சாரம் பெரியார் மீதும் வைக்கப்பட்டது.
அப்போது அவர், “எனக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ… வேறு யாரும் இந்த வேலையைச் செய்ய முன்வரவில்லை என்பதால் நான் செய்கிறேன்” என்று பணிவுடன் கூறினார்.
திரும்பத்திரும்ப ம.பொ.சி. போன்றவர்கள் இதே வாத்த்தை வைக்கவே “ஆமாடா உங்கள் எவனுக்கும் யோக்கியதை இல்லை. நான் செய்கிறேன்” என்றார்.
அதே போல 1983ம் ஆண்டு காலகட்டத்தில் புலிகளுக்கு இடம், சாப்பாடு அளித்ததோடு, தமிழகம் முழுதும் புலிகளின் கண்காட்சி கண்காட்சி நடக்க காரணமாக இருந்தோம். அப்போது இதை யாரும் செய்யவில்லை. செய்திருந்தால் நாங்கள் செய்யத் தேவையிருந்திருக்காது.
மற்றபடி மீண்டும் சொல்கிறேன். நான் தமிழனா இல்லையா என்பது என்னை, எனது போராட்டகரமான வாழ்க்கையை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்” என்று சொல்லி முடித்தார் கோவை ராமகிருஷ்ணன்….