தமிழ் மொழியை பிரகடனப்படுத்துங்கள்

நடந்து முடிந்த தேர்தலில் உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்ற கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்களது நிர்வாக எல்லைகளுக்குள் தமிழ் மொழியை பிரகடனப்படுத்தி காட்டுமாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஊடகங்களின் ஊடாக விடுத்துள்ள பகிரங்க அறைகூவலில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்ற மேயர், தவிசாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கிழக்கில் தனி தமிழ் மொழியை பிரகடனப்படுத்தி தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

80 வீதம் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

ஆனால் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கையில் இல்லாத அளவுமொழிக்கு முன்னுரிமை அளித்து அதனை அவர்கள் காட்சிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தங்களது தாய் மொழியை முதன்மைப்படுத்த தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் தலைவர்கள் இதனை இனவாதமாக காட்டி ஒதுங்கி விடுகின்றனர். இது அவர்களின் கையாளாகாத் தனத்தை காட்டி நிற்கிறது.

“ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்கள் பேசும் மொழியை அழிக்க வேண்டும்” என்பார்கள்.

அந்த வகையில் தமிழ்,முஸ்லிம் இனங்களின் தாய் மொழியான தமிழ் மொழி அழிக்கப்படுவதன் ஊடாக அந்த இனத்தின் அடையாளமும் இருப்பும் தனித்துவமும் அழிந்து போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் இலகுவாக உள்ளூராட்சி சபை நிர்வாகங்களின் ஊடாக நடைமுறைப் படுத்தக் கூடிய தமிழ் பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் பணியை கூட தமிழ் தலைவர்களினால் செய்யமுடியாது போயுள்ளது.

எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்துள்ள மேயர்கள், தவிசாளர்கள் தங்களது நிர்வாகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனி தமிழ் மொழியை பிரகடனப்படுத்தும் வேலை திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை இத்தால் வலியுறுத்தி கூற விரும்புகின்றோம்.

அதாவது “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு தனி தமிழ் மொழியை அதாவது தமிழ் சொற்களை அனைத்து இடங்களிலும் முதன்மைப் படுத்த வேண்டும்.

தமிழ் மொழி பயன்பாடு என்பது தமிழ் எழுத்துக்களால் எழுதுவது மட்டுமல்ல தமிழ் சொற்களை சரியாக பயன் படுத்த வேண்டும்.

குறிப்பாக மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் , அரச திணைக்களங்கள் அனைத்திலும் தனி தமிழ் பெயர்கள் அடங்கிய பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு கீழே ஏனைய மொழியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இதன் ஆரம்பத்தை நாம் மட்டக்களப்பு மாநகர சபையில் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

எனவே புதிய மேயராக பதவி ஏற்றுள்ள தி.சரவணபவன் அவர்கள் முதல் பணியாக சகல வர்த்தகர்களையும் அழைத்து பேசி இதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு இந்த பெயர் பலகைகளும் மொழி சார்ந்த ஏனைய அடையாளங்களுமே எமது தனித்துவத்தை வெளிக்காட்டி நிற்கும் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிர்வாகங்களும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றோம். என தெரிவித்துள்ளனர்.