87 வயதிலும் முச்சக்கர வண்டி செலுத்தி உழைத்துச் சாப்பிடும் தாத்தா!!

டெல்லியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். 87 வயதான அவர் முச்சக்கர வண்டி செலுத்தி வருகிறார். தள்ளாத வயதிலும், மனம் தளராமல் உழைத்து சம்பாதித்து பிழைப்பு நடத்துகிறார்.அவருடைய ஆட்டோவில் பயணிப்பதற்கு, பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம், அவர் ஆட்டோவை நேர்த்தியாகவும், விபத்தை ஏற்படுத்தாத வகையில் இயக்குவதாகவும் பயணிகள் பெருமையுடன் கூறினர்.பொதுவாக பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் ‘மீட்டருக்கு மேல் ஏதாவது போட்டு தாருங்கள்’ என்று கேட்டுதான் பழக்கம். ஆனால், ஓம் பிரகாஷ் மீட்டருக்கு மேல் ஒரு காசும் கூடுதலாக வாங்குவது இல்லை.

இவரது ஆட்டோவில் செல்பவர்கள் பயணத்தின்போது, இந்த வயதில் எப்படி உழைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டால், ‘சிறு வயது முதலே உழைத்து வாழவேண்டும். யாரையும் சார்ந்திருக்காமல் சொந்த காலில் நிற்கவேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதன்படியே இதுவரை நான் இருந்து வருகிறேன்.

1955-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை வாடகை டாக்சி ஓட்டினேன். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டி வருகிறேன்’ என்று விளக்கமாக எடுத்துரைக்கிறார்.ஓம் பிரகாசின் அனுபவத்தை கேட்டு பல பயணிகளின் மனதிலும் லட்சிய விதை விதைக்கப்பட்டு வருகின்றது.இவருடைய ஆட்டோவில் வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் எம்.டி.அருணன் பயணம் செய்துள்ளார். அவரும் ஓம் பிரகாசின் செயல்பாட்டை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.