பட்டதாரிப் பயிலுநர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வில், தவறவிடப்பட்ட பட்டதாரிகளும் உள்வாங்கப்படவுள்ளனர். இது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்தில் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.இலங்கையில் 20ஆயிரம் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனம் வழங்கும் நோக்கில் இந்த மாதம் 16ஆம் திகதி தொடக்கம் மாவட்டச் செயலகங்களில் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளன. அதுபற்றிப் பட்டதாரிகளுக்கு தனிப்பட்ட அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பப்படவில்லை.
அதாவது 2016-12-31 க்கு முன்னர் பட்டம் பெற்ற வேலைதேடும் பட்டதாரிகள் மாவட்டச் செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டிருந்த போதும் ஒன்லைனில் பலர் பதிவுசெய்யத் தவறிவிட்டனர். அவ்வாறு வடக்கு கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 1000 பேர் உள்ளனர்.
அவர்கள் நேர்முகத் தேர்வை இழக்கும் நிலை காணப்படுகிறது. எனவே வேலையற்ற பட்டதாரிகளாகப் பதிவு செய்த குறித்த திகதிக்கு முன்னர் பட்டம் பெற்ற அனைவரையும் அழைக்க உடன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அவசர கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை ஆராய்ந்த பிரதமர் ரணில் குறித்த திகதிக்கு முன்னர் பட்டம் பெற்று நேரடியாகப் பதிவுகளை மேற்கொண்டவர்களையும் நேர்முகத் தேர்வுக்கு உள்வாங்குமாறு அமைச்சின் ஊடாக மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று உத்தரவாதமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.