பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தங்களின் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யமுடியாது என தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கபட்டது.
பிரேரணைக்கான வாக்களிப்புத் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டு நிலைப்பாடு காணப்பட்டிருந்த நிலையில், சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஷ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அநுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.ஏக்கநாயக்க, திலங்க சுமதிபால ஆகிய 16 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
எனினும், அவர்களில் அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
ஆனால், பிரதமருக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சு.கவினர் அனைவரையும் கூட்டரசிலிருந்து அடியோடு தூக்கவேண்டுமென ஐ.தே.கவினர் 38 பேர் கையொப்பமிட்ட எழுத்துமூல ஆவணம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போதும் தாம் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகப்போவதில்லை என பிரேரணைக்கு ஆதரவளித்தவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம,
தேசிய அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் ஜனாதிபதி கூறிய, பிரதமருக்கு எதிராக வாக்களித்த சு.கவின் அமைச்சர்களின் பதவிகள் பறிபோகும் நிலையே காணப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது.