“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன்.
எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார்.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.
இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார். வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார்.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 14 சாட்சியங்களில் 7 சிவில் சாட்சிகளிடம் இன்று மன்றினால் சாட்சியம் பெறப்பட்டது.
அதன் போது பெண்ணொருவர் சாட்சியம் அளிக்கும் போது, இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் பயணித்த வேளை வழிமறித்த இராணுவத்தினர் அவர்களை சிறுப்பிட்டி படை முகாமுக்குள் அழைத்துச் சென்றனர்.
அதனை முகாமுக்கு அண்மையில் நின்று அவதானித்தேன். சிறிது நேரம் அங்கு என்ன நடக்கின்றது என அவதானித்தேன்.
எனினும் அந்த இளைஞர்கள் இருவரும் முகாமுக்குள் இருந்து வெளியே வரவில்லை என அந்தப் பெண் சாட்சியமளித்தார்.
அதேவேளை நேற்று வியாழக்கிழமை 7 சாட்சியங்கள் பதியப்பட்டதுடன் மீதி சிவில் மற்றும் பொலிஸ் சாட்சியங்களை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி பதியப்படும் என தெரிவித்த நீதிவான் வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.