சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அந்த ஆணையத்தில் சசிகலா தரப்பினரின் குறுக்கு விசாரணையில் மருத்துவர் பாலாஜி ஆஜராகியுள்ளார்.
குறுக்கு விசாரணையின் பொழுது அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்துள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன என்பது குறித்து கேட்டறிந்துள்ளார்.
பின்னர் அப்பல்லோ மருத்துவர் ஆப்ரஹாம் கோரிக்கையின் பேரில் கைரேகை பதிவு செய்ய ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உதவியுள்ளார்.
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் சிகிச்சை தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்வோம்.
இவ்வாறு செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.