மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததை கேள்வி எழுப்பியிருந்தார். இதுபற்றி கமல் இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்விட் செய்தார்.
காவிரிதானே கேட்டோம்
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்.
தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள்.
இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? இவ்வாறு கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
துணை வேந்தரை எதிர்க்கவில்லை
இதையடுத்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக ஆங்கிலத்தில் மற்றொரு டுவிட்டில் கன்னடத்துக்காரர் என்பதாலேயே தான் துணை வேந்தரை எதிர்க்கவில்லை என்று விளக்கம் கொடுத்து ஒரு டுவிட்டை வெளியிட்டுள்ளார்.
விளக்கம்
அந்த டிவிட்டில், “ஒரு நகைச்சுவைக்காக (முந்தைய டுவிட்டில்) அப்படிக் குறிப்பிட்டேன்.
உண்மையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகேஷ் என் குருநாதர்களில் ஒருவர், என் நண்பர்கள் ராஜ்குமார் அண்ணா, சரோஜாதேவி, ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் போன்றவர்கள் என் சொந்தங்கள்.
மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்த என் நகைச்சுவை அது. துணைவேந்தர் மீதான சாடல் கிடையாது. எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நட்பு கரம்
கர்நாடகாவில் இனிமேல் கமல்ஹாசன் படங்களை திரையிட அனுமதிக்க கூடாது என நேற்று, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்திருந்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக கமல் கருத்துக்களை கூறிவருவதாக வாட்டாள் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், கமல் திடீரென கர்நாடகத்து சினிமா ஜாம்பவான்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எனது நண்பர்கள் என கூறியுள்ளார்.
இதன் மூலம், கர்நாடகாவுடன் நட்புடன் இருக்கவே கமல் விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் அடங்கியுள்ளது.
கன்னடர் பட்டியலில் ரஜினி பெயர்
ராஜ்குமார், சரோஜா தேவி, அம்பரீஷ் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டதோடு விடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் பெயரையும் கன்னடத்துக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டதாக கூறியதுமே, அவர் கன்னடர் என விமர்சனங்கள் வந்தன. ரஜினிகாந்த் தரப்போ, ரஜினியின் மூதாதையர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்ததாக கூறி வருகிறது.
ஆனால், கமல்ஹாசனோ, ரஜினிகாந்த்தை கன்னடர் என குறிப்பிட்டுள்ளார்.