யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகமும் வடமாகாண தொழில்துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த கண்காட்சியொன்று கடந்த புதன்கிழமை(04) சுன்னாகத்தில் உள்ள உடுவில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்கள் ஆர்வத்துடன் இக்கண்காட்சியில் பங்கேற்று தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.மாலை 4 மணிவரை இடம்பெற்ற குறித்த கண்காட்சியை மிகச் சொற்ப அளவிலான பொதுமக்களே பார்வையிட்டு பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.இதனால் முயற்சியாளர்கள் எதிர்பார்த்த வருவாயை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்தனர்.குறித்த கண்காட்சி தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களையும் சுவரொட்டிகள் வாயிலாகவோ, ஊடகங்கள் வாயிலாகவோ உடுவில் பிரதேச செயலகம் வழங்கியிருக்கவில்லை என்றும் இதனால் தான் குறித்த கண்காட்சி இடம்பெறுவது அயலில் உள்ள பொதுமக்களுக்கு கூடத் தெரியாமல் போய் விட்டது எனவும் குறித்த கண்காடசியில் பங்கேற்ற முயற்சியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.ஆக, உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களே ஓரளவு பங்கேற்று குறித்த கண்காட்சியில் பொருட்களை வாங்கியுள்ளனர். பொதுமக்கள் மிகச் சொற்ப அளவிலே கலந்து கொண்டனர்.தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு விதமான பொருட்களை குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்த முயற்சியாளர் ஒருவர் கருத்து வெளியிடும் போது;
”உண்மையில் இப்படியான கண்காட்சிகள் தான் எமது உற்பத்திகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவி புரிந்து வருகின்றன. ஆனால், துரதிஷ்டவசமாக குறித்த கண்காட்சிக்காக தங்கள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்யும் இருவரை கூட்டி வந்ததாகவும், அவர்களுக்கான சம்பளம், அவர்கள் நேற்று முழுநாளும் நிறுவனத்தில் வேலை செய்திருந்தால், அவர்கள் தயாரிக்கக் கூடிய உற்பத்திப் பொருட்கள் விலை மற்றும் பொருட்களை கொண்டு வருவதற்குரிய வாகனச் செலவுகள் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால் 10,000 ரூபாவுக்கு மேல் செலவாகி விட்டது. ஆனால், கண்காட்சியில் பங்கேற்று 40,00 ரூபாவுக்கு கூட பொருட்கள் விற்கவில்லை எனவும் கவலை தெரிவித்தார்.
உடுவில் பிரதேச செயலகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் ஒருவர் கருத்து வெளியிடும் போது;
ஒரு கண்காட்சியை பத்து முயற்சியாளர்களை கூப்பிட்டு நடத்தி விட்டால் போதும் என்கிற மனநிலையில், இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்கள் செயற்பட்டதாலேயே போதியளவு விளம்பரங்கள் செய்யப்படாமல் குறித்த கண்காட்சி நடாத்தப்பட்டதாகவும், மேலும் குறித்த காலப்பகுதிக்குள் கண்காட்சியொன்றை எப்படியாவது ஏற்பாடு செய்து, குறித்தொதுக்கப்பட்ட நிதியை செலவு செய்து நடாத்தியே ஆகவேண்டும் எனும் நிலையில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது என்றார்.இவ்வாறான கண்காட்சிகள் எமது உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும். முயற்சியாளர்களை சோர்வடையும் வகையில் இருக்கக் கூடாது. தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விற்பனை இல்லையே என்கிற ஏக்கத்தில் முயற்சியாளர்கள் இப்படியான சிறுதொழில் முயற்சிகளை கைவிடும் நிலைக்கு சென்று விடக் கூடாது.இனிவரும் காலங்களிலாவது ,உள்ளூர் உற்பத்திகளை வளப்படுத்தும் இப்படியான பயன்மிக்க கண்காட்சிகளை பிரதேச செயலகம் உரிய முறையில் ஒழுங்கமைக்குமா?
உடுவில் பிரதேச செயலாளரே….. இது உங்களின் கவனத்திற்கு……..