ஊறுகாய் பிரியர்களுக்கு எச்சரிக்கை! ஆபத்துகள் அதிகமாம்…

உணவின் போது கொஞ்சமாய் தொட்டுக் கொள்ளும் ஊறுகாயால் அப்படி என்ன தீங்கு வந்து விடும் என்கிற அலட்சியம் எப்போதுமே நம்முள் உண்டு.

சிறிய அளவில் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் எவ்வகை உணவாக இருந்தாலும் கவனம் வேண்டும்.

5 பைசா திருடினால் தப்பா என்பது போலத்தான் இந்த விஷயங்களும் ஆரம்பிக்கும், பின்பு தான் அதிகரிக்கும்.

இருப்பினும் ஊறுகாய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் நீர் ஊரும்படி இதன் சுவை உள்ளதால் பெரும்பான்மை மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

விதம் விதமான சுவைகளில் கிடைக்கும் ஊறுகாய்கள் நமது சிறிய உணவு இடைவெளியைச் சிறப்பானதாக ஆக்குகிறது என்று சொல்கிற அளவிற்கு இதன் சுவைக்கு நாம் அடிமை ஆகி விட்டோம்.

பதப்படுத்தப்பட்ட காய்கள் மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் எண்ணெய் மற்றும் உப்பு இவற்றின் கலவையான ஊறுகாய்கள் சில சமயங்களில் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது.

இவைகளை அதிகம் சாப்பிடுவதால் அடி வயிற்றில் பிடிப்பு வலி போன்றவை ஏற்படுகின்றன. சில சமயங்களில் வயிற்றுப்போக்கு கூட ஏற்படுகிறது.

தவிர இதன் அதிகக் காரத் தன்மையால் அல்சர் போன்ற வியாதிகளும் வருகிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு மற்றும் எண்ணைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் முதலில் தவிர்க்க வேண்டிய பொருள் ஊறுகாய்தான்.

இதில் உள்ள அதிக உப்பு, அதிக எண்ணெய் மற்றும் அதிக காரம் உயர் ரத்த அழுத்தத்தை உயர்வாகவே வைத்திருக்கும்!

நீரிழிவு உள்ளவர்கள் இதனைச் சுத்தமாகத் தவிர்த்து விட வேண்டும், இல்லாவிட்டால் அதிக பாதிப்புக்கு ஆளாவர்கள்.

ஊறுகாயில் உள்ள பதப்படுத்தும் பொருள் உடலில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தி வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போலத் தோன்ற வைக்கும்.

ஊறுகாயில் உள்ள எண்ணெய் ரத்தத்தில் உள்ள ட்ரை க்ளிசரைட்களின் அளவை அதிகமாக்கி இதய நோய்க்கு வழி வகிக்கும்.

அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அமிர்தமே விஷமாகிவிடும் எனும்போது ஊறுகாயின் விளைவுகள் என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

மொத்தத்தில் தொடர்ந்து சிறிய அளவில் உட்கொள்ளும் ஊறுகாயை இனி எப்போதாவது ஒரு முறை உட்கொண்டு வந்தால் நல்லது.