*நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் 11 மணியளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யராஜ், சூர்யா, தனுஷ் பங்கேற்பு :
போராட்டக் களத்திற்கு சத்யராஜ், சூர்யா, தனுஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். தனுஷ் போராட்டக் களத்திற்கு வந்தவுடன் விஜய்க்கு கைக்கொடுக்க வந்தார்.
அப்போது அருகில் இருந்த சிவகார்த்திகேயன் எழுந்து நிற்க, சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்த தனுஷ், அவரை அணைத்துக்கொண்டார். முன்னர் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று திரைத்துறையில் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேடையில் விஜய் – விஷால் நெகிழ்ச்சி :
விஜய்க்கும் விஷாலுக்கும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்து வந்ததாக தமிழ் திரையுலக வட்டாரத்தில் தகவல் கசிந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசை வலியுறுத்தி நடந்து வரும் மௌன அறவழிப் போராட்டத்தில் விஷாலுக்கு முன்பே விஜய் போராட்டக் களத்துக்கு வந்தார்.
விஷால் வந்தவுடன் விஜய் எழுந்து இருவரும் அணைத்துக் கொண்டனர். விஜய் அருகில் விஷால் அமர வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் எழுந்து விஷாலுக்கு இடங்கொடுத்தார். இருவரும் அருகில் அமர்ந்து போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
நாசர் பேச்சு…
*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் கோரிக்கை.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.
இந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் முடிவில், தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் முழு வீச்சில் செயல்பட்டுவரும் கமல், ரஜினி இன்றைய அறவழி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் சிவக்குமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெஃப்சி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய் போராட்டம் துவங்கும் முன்னரே போராட்டக்களத்துக்கு வந்தடைந்தார்.