முன்னாள் போராளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாட்டுக்குச் சென்று வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வார்களாயின், அதற்கான செலவினை வழங்குவதற்கு எமது பணியகம் தயாராக இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பின்னடைவுகளை நாங்கள் சந்தித்திருந்தோம்.

இந்த யுத்தம் காரணமாக, பலர் உயிர்களை இழந்திருந்தார்கள், அங்கவீனமுற்றிருந்தார்கள், விடுதலைப்புலி உறுப்பினர்களும் அங்கவீனமடைந்திருந்தார்கள். இவ்வாறு சமூகப்பின்னடைவுகள் பல இருந்தன.

மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த 12,282 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது புனர்வாழ்வுகளுக்காக மிகச்சிறியளவினரே எஞ்சியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இணைந்து கொள்பவர்களுடன் இந்த புனர்வாழ்வுச்செயற்பாடு இறுதிகட்டத்தினை அடைந்துவிடும்.இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமான பணியாக கருதப்படுவது அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதும் வாழ்வாதார ரீதியாக மேம்படுத்துவதுமாகும்.

பிரதமர் அலுவலகத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருக்கின்ற முன்னாள் போராளிகளை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

புனர்வாழ்வு பெற்றவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வாராயின் அவருக்கான பயணச்சீட்டிற்கான செலவினைக்கூட வழங்குவதற்கு எமது பணியகம் தயாராக இருக்கிறது.

எனவே, தொடர்ந்து எதிர்காலத்திலும் தேசிய நல்லிணக்க அமைச்சு, எமது புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் ஊடாகவும் அமைச்சின் ஊடாகவும், பிரதமரின் அலுவலகம், புனர்வாழ்வு அதிகாரசபை ஆகியவற்றின் மூலமாகவும் பல உதவிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவுள்ளோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.