கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு – இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் ‘ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
அதேபோல், பதநீரும், நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து, உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது. நம் உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து அசௌகரியங்களில் இருந்தும், நம்மைக் காக்கும் நுண்சத்துக்கள் இதில் அதிகம். ரத்த சோகையைப் போக்கும். தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இப்படி நுங்கும் பதநீரும் நமக்கு அள்ளித் தரும் நன்மைகள் ஏராளம்!”
டிப்ஸ்
நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.
பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.
சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.
நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.