யாழ்ப்பாணம் நீர்வேலியில் தங்கியிருந்து கல்வி கற்ற வட்டக்கச்சி மாணவன் வாந்தியெடுத்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது.
வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன்_நிலாபவன் (வயது-16) என்பவரே உயரிழந்தார்.
கடந்த டிசம்பர் ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீ்ட்சைக்குத் தோற்றிச் சிறந்த பெறுபேறு பெற்றுள்ளார். அவர் கெட்டிக்காரன் என்பதால் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வியைத் தொடரும் நோக்கில் யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தில் கடந்த 4 மாதங்களாக உயர்தரக் கற்கையை மேற்கொண்டுவந்தார்.
அவர் நீர்வேலியிலுள்ள தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்தே கல்வி கற்று வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் அலைபேசியில் தொடர்புகொண்டு உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பெரியம்மாவுடன் தங்கியிருந்து கற்கையை தொடருமாறு கூறியுள்ளார். அதற்கு மாணவன் மறுத்துள்ளார். பின்னர் தாம் குடும்பமாக யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியிருக்கிறோம்.
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையில் தான் சேர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கும் மாணவன் சம்மதிக்கவில்லை. தான் வட்டக்கச்சியில் தான் உயர்கல்வி கற்கப்போவதாகக் கூறியுள்ளார். அதுபற்றிய விடயங்கள் அலைபேசியில் பேசப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் குறித்த மாணவன் வாந்தி எடுத்துள்ளார். அவரை கோப்பாய் மருத்துவமனையில் சேர்த்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றும்போதுஅவர் உயரிழந்துவிட்டமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் ஒருவகை நச்சுத்தரவத்தை அருந்தி உயிரிழ்ந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவருகிறது. ஆனால் அது என்ன திரவம் என்று உடற்கூற்று பரிசோதனையில் தெரியவரவில்லை.
அவர் அருந்தியது என்னவென்பது பற்றி ஆராய உடற்பாகம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை நடத்தினார்.