வெளிப்பட்ட பேரினவாத முகம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பாக சிங்களப் பேரினவாத சக்திகளின் மனோநிலையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி ஜனாதிபதி மைத்திபால சிறிசேன எடுக்கும் முடிவில் தான் தங்கியிருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதன் மூலம் அதனை வெற்றி பெற வைக்கலாம் என்பது மகிந்தவின் கருத்தாக இருந்தது. ஆனால் அதற்கு அப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவு தான் முக்கியமானதாக இருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுக்கும் முடிவில் தான் அதன் வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கிறது என்பதை மகிந்த அறியாதவரல்ல.

ஆனால் அவர் கூட்டமைப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்பதே உண்மை.

ஆனாலும் இரா.சம்பந்தனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க வைப்பதற்காக சிங்களப் பேரினவாதச் சிந்தனையாளர்கள் அறிக்கைகள், கருத்துக்கள் மூலம் கடுமையாக அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை தேசிய அரசியலில் இருந்து ரணிலை அகற்றிவிட முடியாது என்று பேரினவாதியான குணதாச அமரசேகர கூறியிருந்தார்.

அதுபோல சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதிய அத்துரலிய ரதன தேரர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்றும், நீங்கள் வடக்கு கிழக்குக்கு மாத்திரம் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, முழு நாட்டுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பகடைக்காயாக பயன்படுத்தக் கூடாது என்றார்.

அதுபோல தமிழ் மக்களின் அபிலாஷைகளின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இங்கேயும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்களுக்கு கூட்டமைப்பு துரோகம் செய்துவிடக் கூடாது என்றும் அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தக் கருத்துக்களில் இருந்து பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தங்களின் தேவைகளுக்காக ஆடுகின்ற பொம்மைகளாக வைத்திருக்கவே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாகிறது.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியடைந்த மகிந்த அணியினர் அடுத்ததாக எடுத்துக் கொண்ட அஸ்திரம் தான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை.

இதன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து தமக்குச் சாதகமான ஓர் ஆட்சியை நிறுவிக் கொள்வதும், குறுகிய காலத்துக்குள் பாராளுமன்றத்தைக் கலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தான் அவர்களின் இலக்காக இருந்தது. மகிந்த ராஜபக்ச இந்த நோக்கத்தை பகிரங்கமாகவே கூறியுமிருந்தார்.

பிரதமரை பதவியில் இருந்து நீக்கினால் தான் அடுத்ததாக எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற நிலை அவர்களுக்கு இருந்தது. இதற்காகவே அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்தனர்.

இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தம்முடன் இணைந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதே ஐதேகவுக்கு எதிரான சிங்களப் பேரினவாத சக்திகளின் கருத்தாக இருந்தது.

ஐதேகவும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சரி சிங்களப் பேரினவாத சிந்தனைகளிலேயே மூழ்கியுள்ளவை.

ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சில விடயங்களில் முன்னேற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டிருக்கிறது.

அதேவேளை ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்க நினைத்த தரப்புகளின் கடந்த காலம் என்ன அவர்கள் தமிழ் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் யோசிக்க வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது.

ரணிலைக் காப்பாற்றக் கூடாது அது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானது என்று கூறிய சிங்கள மேலாதிக்கச் சிந்தனையாளர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை என்றாவது கருத்தில் எடுத்திருந்தார்களா?

தமிழ் மக்களின் விருப்பங்களை அவர்களின் குறைகளை நிறைவேற்ற முனைந்தார்களா இல்லை. எப்போதும் அதற்குக் குறுக்கே நின்றதே அவர்களின் வரலாறாக இருந்தது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற முடிவின் மீது தாக்கம் செலுத்துகின்ற உரிமை தமிழ் மக்களுக்கு மாத்திரமே உரித்தானதேயன்றி சிங்களச் சிந்தனையாளர்களுக்கு உரியதல்ல.

ஆனால் அவர்கள் அதனைத் தமது கையில் எடுத்துக்கொள்ள முயன்றார்கள். முழு நாட்டுக்குமான எதிர்க்கட்சி என்ற பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று மிரட்டியும் பார்த்தார்கள்.

முழு நாட்டுக்குமான எதிர்க்கட்சி என்றால் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணித்து விட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

முழு நாட்டுக்குமான எதிர்க்கட்சித் தலைவர் பற்றிப் பேசுகின்ற இவர்கள் முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாக, பிரதமராக எத்தனை ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை எப்போதாவது சிந்தித்தமிருக்கிறார்களா?

அப்படி முழு நாட்டுக்குமான ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இன்னும் பிரச்சினைகளுடன் உரிமைகள் இன்றியும் வாழும் நிலை ஏற்பட்டிருக்காதே.

அரசியலில் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது தான் இயல்பு. ரணிலைப் பதவியில் இருந்து நீக்கும் முயற்சிகளின் போது தோற்றியதும் அத்தகையதொரு வாய்ப்பே.

ஆனால் அத்தகைய வாய்ப்பு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் போது அதனை அவ்வாறு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சிங்களச் சிந்தனையாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதனைப் பகடையாக வைத்து நலன்களை அடையக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள். இது அவர்களின் மேலாதிக்கச் சிந்தனையை மேலும் அப்பட்டமாகவே காடடுகிறது.

கூட்டு அரசாங்கத்தில் ஐதேகவுடன் ஸ்ரீலங்கா சு.க இணைந்து கொண்டதற்கு காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அவர்கள் ஆட்சியமைத்து விடக் கூடாது என்பதால் தான் என்று சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

தமிழர் தரப்புகள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது பேரம் பேசிவிடக் கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதச் சிந்தனையாளர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட இதற்கு விதிவிலக்கானவராக இல்லை என்றே கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்கக் கூடாது என்றும் அது மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஐதேக அமைச்சர்களிடம் ஜனாதிபதி கூறியதாக தகவல்.

இதே ஜனாதிபதி 2015ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். எனினும் அப்போது தமிழ் மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை.

உண்மையில் ரணில் அரசாங்கத்தை தமிழ் மக்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்ததில்லை. தமிழர்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற பயத்தில் சிங்கள மேலாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்டது அந்த ஆட்சி.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்படியல்ல. தமிழ் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்தவர். தமிழ் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்.

அவரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் ரணில் வெற்றிபெற முனையக் கூடாது என்று எச்சரிக்கின்ற நிலையில் இருக்கிறார் என்பது தான் வேடிக்கை.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை மறுப்பதுடன், தமிழ் மக்களை தமது ஏவலுக்கு ஆடுகின்றவர்களாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிங்கள மேலாதிக்கச் சிந்தனையாளர்களிடம் நிறையவே காணப்படுகிறது.

அதுதான் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் இந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுத்ததற்குக் காரணம்.

ரணிலைக் காப்பாற்றக் கூடாது என்று சம்பந்தனுக்கு கடிதம் எழுதிய அத்துரலிய ரதன தேரர் கூட கடைசியில் ரணிலைக் கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்காமல் ஒதுங்கினார்.

ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலைக்குள் ஐதேக வந்து விடுமோ என்ற அச்சம் அவர்களைப் போன்றவர்களுக்கு இருந்தது.