மரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும்: நிரூபித்த விஞ்ஞானிகள்

இறந்த பின்னர் உயிர் வாழ்வது தர்க ரீதியாக முரணாக தெரிந்தாலும் அறிவியல் மூலம் இந்த முரண்பாட்டை தகர்த்து நம்மால் இறந்த பின்னரும் உயிர் வாழ முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

நிஜத்தில் மரணத்தை வெல்ல மனிதனால் முடியுமா? எனும் சந்தேகம் சரியானது தான் ஆகவே நம் பூத உடலை நாம் நிச்சயமாக அழியாமல் காக்க முடியாது.

ஆனால் நம் நினைவுகளை மட்டும் டவுண்லோட் செய்துகொண்டு, இறந்தவுடன் அந்த ஞாபகங்களை வேறொரு ஆரோக்கியமான உடலுக்கு அப்லோட் செய்துவிட்டால் என்ன? இதைத்தான் மறைந்த எழுத்தாளர் சுஜாதா தனது பேசும் பொம்மைகள் நாவலில் பேசியிருப்பார்.

இப்போது, கிட்டத்தட்ட அதே திட்டத்துடன், தன்னால் அதைச் செய்ய முடியும் என ‘நெக்டோம்’ (Nectome) எனும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது.

இதை, அவர்கள் கூலாக ‘Mind Uploading Service’ என்கிறார்கள். ஆனால், இது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. மனதளவிலும், உடல் அளவிலும் பல்வேறு வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

இவர்களின் திட்டத்தை இப்படி விளக்குகிறார்கள். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரின் மூளையை மட்டும் பதப்படுத்த வேண்டும். அதற்காக, அவரின் ரத்தக் குழாய்களில் எம்பாமிங் (Embalming) ரசாயனம் செலுத்தப்படும்.

இதை செய்யும்போது, அவரின் உயிர் பிரிந்துவிடும். அதன்பின், பதப்படுத்தப்பட்ட மூளையை மேப்பிங் (Mapping) செய்வார்கள். அதாவது மூளையின் நரம்புகள் ஒவ்வொன்றும் எவ்வாறெல்லாம் பின்னிப்பிணைந்து இருக்கின்றன, நியூரான்கள் எனப்படும் நரம்பணுக்கள் எவ்வாறெல்லாம் தொடர்பில் இருக்கின்றன போன்ற தகவல்கள் அப்படியே பிரதி எடுக்கப்படும்.

இப்படி மூளையின் கடினமான குழப்பம் ஏற்படுத்தும் தொடர்புகளின் மேப்பை ‘Connectome’ என்று அழைக்கிறார்கள். இதை வைத்து, எதிர்காலத்தில் தங்களால் இறந்தவர்களின் நினைவுகளை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள்.

இவர்களை எப்படி நம்புவது? இந்தக் கேள்விக்கு பதிலாக, தங்கள் நிறுவனத்தின் விருதுபெற்ற சாதனை ஒன்றை முன்வைக்கின்றனர். அதில் இவர்கள், ஒரு பன்றியின் மூளையை இதேபோல பதப்படுத்தி, அதன் ‘Connectome’-ஐ வெற்றிகரமாகப் பிரதியெடுத்துள்ளனர்.

ஆனால், இந்தச் செய்திகள் வெளியானதும் நெக்டோம் நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு விளம்பரமும் புகழும் கிடைத்ததோ, அதே அளவு எதிர்ப்பும், பிரச்னைகளும் வந்துள்ளன.

காரணம், இவர்களின் ஆராய்ச்சிகுறித்துத் தெரிந்துகொண்ட நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாரார், இது முட்டாள்தனமான ஆராய்ச்சி என்று பகிரங்கமாக விமர்சனம்செய்துள்ளனர்.